சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டம்
குமரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் 15 இடங்களில் சாலையில் வாகனத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
குமரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் 15 இடங்களில் சாலையில் வாகனத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகனங்களை நிறுத்தி போராட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு மற்றும் அதன் மீதான வரி உயர்வை கண்டித்தும், விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இந்திய தொழிற்சங்க மையங்கள் (சி.ஐ.டி.யு.) சார்பில் 10-ந் தேதி (அதாவது நேற்று) மதியம் 12 மணி முதல் 12.10 மணி வரை 10 நிமிடங்கள் சாலையில் வாகன நிறுத்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் குமரி மாவட்டத்திலும் சி.ஐ.டி.யு. சார்பில் போராட்டம் நடந்தது. நாகர்கோவில் ஜீவா மணி மண்டபம் முன்பு நடந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அந்தோணி, வக்கீல் மரிய ஸ்டீபன், பெருமாள், லட்சுமணன், ஆசீர், அஜீஸ், மோகன், பெனிஸ் ராஜா, மாணிக்கவாசகம், பிரான்சிஸ், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
போராட்டத்தின் போது சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தாங்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்களுடன் சாலையில் 10 நிமிடங்கள் நின்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் காத்து நின்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 10 நிமிடத்திற்கு பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் பிறகு போக்குவரத்து சீரானது.
போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்திருந்தனர். இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஆரல்வாய்மொழி
தோவாளை வட்டார சி.ஐ.டி.யு. சார்பில் சாலையில் வாகன நிறுத்தும் போராட்டம் ஆரல்வாய்மொழி சந்திப்பில் நடந்தது. சி.ஐ.டி.யு. ஒன்றிய கன்வீனர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய கட்டுமான சங்க தலைவர் மகாதேவன், தையல் சங்க செயலாளர் பொன்னம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சித்ரா தொடக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பேச்சிமுத்து, மனோகரன், கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
15 இடங்களில்...
இதேபோல் கொல்லங்கோடு, நித்திரவிளை, குழித்துறை, மார்த்தாண்டம், மேல்புறம், அருமனை, கடையாலுமூடு, குலசேகரம், வேர்கிளம்பி, கருங்கல், தக்கலை, திங்கள்நகர், ஈத்தாமொழி ஆகிய பகுதிகளிலும் சி.ஐ.டி.யு., விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவை சார்பில் 10 நிமிடம் சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடந்தது. அதன்படி, நேற்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 15 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story