ஓடும் பஸ்சுக்குள் புகுந்து 4 பேருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு


ஓடும் பஸ்சுக்குள் புகுந்து 4 பேருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 10 Dec 2021 11:24 PM IST (Updated: 10 Dec 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சுக்குள் புகுந்து 4 பேருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதால் மற்ற பயணிகள் அலறினார்கள்.

பரமக்குடி,

ஓடும் பஸ்சுக்குள் புகுந்து 4 பேருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதால் மற்ற பயணிகள் அலறினார்கள்.

கொலை வழக்கில் ஆஜர்

ராமநாதபுரம் மாவட்டம் அரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கடந்த 2019-ம் ஆண்டு ஒரு கும்பல் கொலை செய்தது.
இந்த வழக்கில் கைதான மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த 18 வயதான 3 வாலிபர்களும், தர்மலிங்கம்(52) என்பவரும் ஜாமீனில் வெளியே இருந்தனர். இவர்கள் 4 பேரும் அந்த கொலை வழக்கு விசாரணைக்காக நேற்று ராமநாதபுரம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜராகினார்கள்.
 பின்பு அங்கிருந்து பஸ்சில் மதுரைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பஸ்சை பின்தொடர்ந்து ஒரு கார் வந்தது.

4 பேருக்கு அரிவாள் வெட்டு

பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்த போது காரில் வந்த கும்பல் பஸ்சை வழிமறித்தது. உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
அதன் பின்னர் காரில் இருந்து ஹெல்மெட் அணிந்து கொண்டு கீழே இறங்கிய 6 பேர், பஸ்சுக்குள் வேகமாக ஏறினார்கள்.
கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் பஸ்சுக்குள் ைவத்தே சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதை பார்த்து பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அலறினார்கள். ஒரு சிலர் கீழே இறங்கி ஓடினார்கள். அந்த கும்பல் அவர்களை வெட்டி விட்டு தாங்கள் வந்த காரிலேயே ஏறி தப்பிச்சென்றனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் பஸ்சுக்குள் நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் விரைந்தனர்

  இதுகுறித்து தகவலறிந்து பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பஸ்சில் ரத்த வெள்ளத்தில் கிடந்த 4 பேரையும் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற கும்பலை தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Next Story