ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள தூரத்தியேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் நாகநாதன். இவருடைய மகன் அலெக்ஸ் பாண்டியன் (வயது 25). இவர் ராமநாதபுரம் அருகே வன்னிவயல் பகுதியில் தங்கியிருந்து டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை டிராக்டரில் செங்கல் ஏற்றிக்கொண்டு ராமநாதபுரத்தில் இறக்கி விட்டு மீண்டும் வன்னிவயல் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். ரெட்டை போஸ்ட் வேகத்தடை அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் டிராக்டர் டயர்ஏறி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இது குறித்து அவரது அக்காள் சலீமா பேகம் (33) என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.