பெத்தநாயக்கன்பாளையம் அருகே தந்தை இறந்த அதிர்ச்சியில் மகளும் பலியான பரிதாபம்


பெத்தநாயக்கன்பாளையம் அருகே தந்தை இறந்த அதிர்ச்சியில் மகளும் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 11 Dec 2021 4:13 AM IST (Updated: 11 Dec 2021 4:13 AM IST)
t-max-icont-min-icon

பெத்தநாயக்கன்பாளையம் அருகே தந்தை இறந்த அதிர்ச்சியில் மகளும் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெத்தநாயக்கன்பாளையம்:
பெத்தநாயக்கன்பாளையம் அருகே தந்தை  இறந்த அதிர்ச்சியில் மகளும் பரிதாபமாக உயிரிழந்தார்.
கூலித்தொழிலாளி
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள தும்பல் பகுதியை சேர்ந்தவர் சின்னமாது (வயது 60). கூலித்தொழிலாளி. இவருக்கு லோகாம்பாள் (30) என்ற மகளும், வெங்கடேஷ், மணி என்ற மகன்களும் இருந்தனர்.
லோகாம்பாளுக்கு திருமணம் ஆகி விட்டது. அவர் தனது கணவர் சீனி மற்றும் மகன் கோகுல் ஆகியோருடன் அதே பகுதியில் வசித்து வந்தார். லோகாம்பாள் தனது தந்தை மீது அதிக பாசத்துடன் இருந்துள்ளார். 
சின்னமாது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று அவர் உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த அவரது மகள் லோகாம்பாள் தனது கணவர் வீட்டில் இருந்து, தந்தை வீட்டுக்கு ஓடி வந்தார்.
மகளும் பலி
தந்தை இறந்த சோகம் தாங்காமல் அப்பா என கதறி அழுதபடியே அவரது உடல் மீது சாய்ந்தார். சில நிமிடங்களில் லோகாம்பாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறியாத உறவினர்கள் அவரை எழுப்பிய போது எழுந்திருக்கவில்லை. அப்போது தான் அவர்களுக்கு லோகாம்பாள் இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் உறவினர்கள் அடக்கம் செய்தனர். தந்தை உயிரிழந்த அதிர்ச்சியில் அவர் உடல் மீதே சாய்ந்து மகள் உயிரை விட்ட சம்பவம் அவர்களது உறவினர்கள் மட்டுமின்றி கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story