பெங்களூருவில் நூதன முறையில் போதைப்பொருட்கள் விற்ற 5 பேர் கைது


பெங்களூருவில் நூதன முறையில் போதைப்பொருட்கள் விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2021 4:25 AM IST (Updated: 11 Dec 2021 4:25 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நூதன முறையில் போதைப்பொருட்கள் விற்ற கேரளாவை சேர்ந்த 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு:

5 பேர் கைது

  பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்துவோரை போலீசார் கைது செய்து வருகிறார்கள். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களும் போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஆன்லைன் மூலமாக உணவு விற்பனை செய்வது போல் நடித்தும், கூரியர் மூலமாக வீடுகளுக்கும் போதைப்பொருட்களை அனுப்பி வைப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

  ஆனாலும் அவர்கள் போலீசாரிடம் சிக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் நூதன முறையில் போதைப்பொருட்களை விற்ற 5 பேர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அதாவது மடிவாளா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மரத்திற்கு அடியில் போதைப்பொருட்கள் கிடந்தது. இதுகுறித்து மடிவாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து கொண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.

மரத்திற்கு அடியில் வைத்து...

  இந்த விசாரணையின் போது மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருட்களை நூதன முறையில் விற்ற கேரளாவை சேர்ந்த முகமது சகாரியா, சாமில், பிரணவ், அனுபவ் ரவீந்திரன், ஷியாம் தாஸ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 5 பேரும் பெங்களூருவில் தங்கி இருந்து போதைப்பொருட்களை விற்று வந்துள்ளனர். போதைப்பொருட்கள் கேட்கும் நபர்களுக்கு நேரடியாக கொண்டு போய் கொடுத்தால், போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்று 5 பேரும் கருதி உள்ளனர்.

  இதற்காக நகரில் உள்ள ஏதாவது இடத்தில் போதைப்பொருட்களை மறைத்து வைத்து விடுவார்கள். அதாவது பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மரத்தடியில் 5 பேரும் போதைப்பொருட்களை வைப்பார்கள். பின்னர் அந்த இடத்தை புகைப்படம் எடுத்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். மேலும் போதைப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடம் பற்றி வாட்ஸ்-அப் மூலமாக இருப்பிடத்தை (லொக்கேஷன்) அனுப்பி வைப்பார்கள்.

ஆன்லைன் மூலம் பணம்

  உடனே அந்த பகுதிக்கு வாடிக்கையாளர்கள் சென்று போதைப்பொருட்களை எடுத்து சென்று விடுவார்கள். ஆன்மூலமாக வாடிக்கையாளர்களும் 5 பேருக்கும் பணத்தை அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு போதைப்பொருட்கள் விற்பனை செய்ததன் மூலம் மாதந்தோறும் குறிப்பிட்ட அளவுக்கு 5 பேரும் பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.

  கைதானவர்களிடம் இருந்து போதைப்பொருட்கள், பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 5 பேர் மீதும் மடிவாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story