வீரபாண்டி ஆ.ராஜா உருவப்படத்தை திறந்து வைக்கிறார்:ரூ.261.39 கோடியில் நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


வீரபாண்டி ஆ.ராஜா உருவப்படத்தை திறந்து வைக்கிறார்:ரூ.261.39 கோடியில் நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x
தினத்தந்தி 11 Dec 2021 4:30 AM IST (Updated: 11 Dec 2021 4:30 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இன்று நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.261.39 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என்றும், வீரபாண்டி ஆ.ராஜா உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சேலம்:
சேலத்தில் இன்று நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.261.39 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என்றும், வீரபாண்டி ஆ.ராஜா உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று (சனிக்கிழமை) அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநில அளவில் ரூ.300 கோடி மதிப்பில் நமக்கு நாமே திட்டம், ரூ.100 கோடியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
இந்த விழாவுக்காக சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் மேடை மற்றும் பந்தல் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசு விழா நடைபெறும் மேடையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
திட்டப்பணிகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை (இன்று) காலை 9.45 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் மேடைக்கு வருகிறார். வரும் வழியில் கட்சி தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கிறார்கள்.
மேடையில் 1 மணி நேரம் விழா நடைபெறும். அதில் 12 துறைகள் மூலம் ரூ.38 கோடியே 52 லட்சத்தில் முடிவுற்ற 83 திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். 6 துறைகள் மூலம் ரூ.54 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.21 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் 3 அரசு வாகனங்களை வழங்குகிறார்.
அதைத்தொடர்ந்து 26 துறைகள் மூலம் 30 ஆயிரத்து 837 பயனாளிகளுக்கு ரூ.168 கோடியே 64 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அளிக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மொத்தம் ரூ.261 கோடியே 39 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர் புதிய திட்டங்களை அறிவிப்பார்.
வீரபாண்டி ஆ.ராஜா உருவப்படம் திறப்பு
விழா முடிந்த பின்னர் சேலம் 5 ரோட்டில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில், மறைந்த வீரபாண்டி ஆ.ராஜாவின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். அதன்பிறகு அவர் அஸ்தம்பட்டியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்று மதிய உணவு அருந்துகிறார். பின்னர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
சேலத்திற்கு தொழில் நுட்ப பூங்கா, ஜவுளி பூங்கா, ரிங்ரோடு, பஸ்போர்ட், லாரி நிறுத்த இடம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளன. இவைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இரவே எடுத்துக்கூறப்படும். நிதித்துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக சாத்தியக்கூறு உள்ள பணிகளை தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பனமரத்துப்பட்டி ஏரிக்கு மேட்டூர் உபரி நீரை கொண்டு வருதல், லாரி மார்க்கெட்டிற்கு என்று தனி இடம் ஆகிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துல் போன்ற பணிகள் உள்ளன. அவைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும்
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே விரைவில் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்கு போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்தை தற்போது துரிதப்படுத்தி உள்ளோம்.
 சேலம் மாவட்டத்தில் ஏதாவது குறைகள் இருந்தால் அவை திருத்திக்கொண்டு பொதுமக்களின் வீடுகள் பாதிக்காத வகையில் சாலைகள் அமைக்கப்படும்.
முதல் முறை
விழா மேடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பலருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவார். அதே நேரத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் விழா பந்தலிலேயே அரசு அதிகாரிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். ஒரே விழாவில் 30 ஆயிரத்து 837 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது இதுவே முதல் முறை ஆகும்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
தொடர்ந்து. தி.மு.க. அரசை கண்டித்து, அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, நாங்கள் லட்சம் ஆர்ப்பாட்டம் நடத்திதான் இங்கு வந்து இருக்கிறோம் என்று பதில் அளித்தார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story