குழந்தை இல்லாத ஏக்கத்தில் சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை


குழந்தை இல்லாத ஏக்கத்தில் சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 11 Dec 2021 4:39 AM IST (Updated: 11 Dec 2021 4:39 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை இல்லாத ஏக்கத்தில் சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்:
குழந்தை இல்லாத ஏக்கத்தில் சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து  குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஒப்பந்த ஊழியர்
சேலம் இரும்பாலை அருகே உள்ள வீரக்காரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால். இவர் உருக்காலையில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுதா (வயது 30). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் சுதா மிகவும் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் நேற்று கணவர் வேலைக்கு சென்றதும் சேலம் 5 ரோடு அருகே உள்ள ஈரடுக்கு மேம்பாலம் பகுதிக்கு நடந்து வந்தார். பின்னர் சுதா திடீரென மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாவு
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு 8.10 மணிக்கு சுதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அழகாபுரம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் கூறும் போது, கோபாலுக்கும், சுதாவுக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. 
இதனால் சுதா சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டெஸ்ட் டியூப் பேபிக்கு சிகிச்சை பெற்று வந்தார். அப்போதும் கரு உருவாகவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரை கணவர், பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்தும், கடும் மன உளைச்சலில் இருந்த சுதா மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்தனர். 
விசாரணை
மேலும் இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story