பெண்களை குறி வைத்து திருடிய வாலிபர் கைது


பெண்களை குறி வைத்து திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2021 12:20 PM IST (Updated: 11 Dec 2021 12:20 PM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் அருகே பெண்களை குறிவைத்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேப்பூர், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பின்னலவாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி குமாரி(வயது 39). கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வேப்பூர் அருகே மேலக்குறிச்சி கிராமத்திற்கு சென்றார்.  வேப்பூர் அருகே ஐவதகுடி ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் துணியால் முகத்தை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், திடீரென குமாரி கழுத்தில் கிடந்த நகையை பறித்துவிட்டு, மின்னல் வேகத்தில் சென்று விட்டார். 
இது குறித்து குமாரி கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
வாலிபர் கைது 

இந்த நிலையில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் நேற்று காலை 6 மணி அளவில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது ஏ.கொளப்பாக்கத்தில் நின்று கொண்டிருந்த வாலிபரிடம், சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை தாம்பரம் அஜிஸ்நகரை சேர்ந்த முருகன் மகன் பிரபு என்கிற பிரபாகரன்(வயது 24) என்பதும், குமாரியிடம் நகையை பறித்ததும், விழுப்புரத்தில் ஒரு பெண்ணிடம் நகையை திருடியதும், சென்னை பீர்க்கன்காரணையில் உள்ள ஒரு ஷோரூமில் மோட்டார் சைக்கிளை திருடியதும், குறிப்பாக பெண்களை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 

Next Story