‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 11 Dec 2021 1:51 PM IST (Updated: 11 Dec 2021 1:51 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாய்ந்த கம்பம் உடனடி அகற்றம்

சென்னை அயனாவரம் சயானி பஸ் நிலையம் அருகே சாலையின் நடுவே வழிகாட்டி கம்பம் ஆபத்தான நிலையில் சரிந்து கிடக்கும் செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதனையடுத்து இந்த ஆபத்தான கம்பம் உடனடியாக அகற்றப்பட்டு இருக்கிறது. இதற்காக மாநகராட்சி நிர்வாகத்துக்கும், ‘தினத்தந்தி’ பத்திரிகைக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

அச்சமூட்டும் ஆபத்தான மின்கம்பம்


சென்னை புழல் லட்சுமி அம்மன் கோவில் மெயின் தெருவில் உள்ள மின்கம்பம் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. மின்கம்பத்தில் அடிப்பகுதியில் துருப்பிடித்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. செல்லரித்து போனது போல கிடக்கும் இந்த மின்கம்பம் அப்பகுதிவாசிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை ஏற்படுத்தி தர மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

- சீ.விஜய், புழல்.

சாலையில் ஓடும் கழிவுநீர்

சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 8-வது தெருவில் (4-வது குறுக்கு சந்திப்பு) கடந்த 6 மாதங்களாக கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கிறது. சாலையில் ஓடும் இக்கழிவுநீரால் அப்பகுதியே துர்நாற்றம் சூழ்ந்திருக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. பல்வேறு நோய்களால் இப்பகுதிவாசிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த கழிவுநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், மக்களுக்கு மன நிம்மதி தரும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

- பொதுமக்கள், எஸ்.ஏ.காலனி.

‘டிரான்ஸ்பார்மர்’ மீது விழும் மரக்கிளைகள்

சென்னை முகப்பேர் கிழக்கில் ஒலிம்பிக் காலனி 2-வது குறுக்கு தெருவில் ‘டிரான்ஸ்பார்மர்’ ஒன்று உள்ளது. இதன் அருகேயுள்ள பெரிய மரத்தின் கிளைகள் இந்த ‘டிரான்ஸ்பார்மர்’ மீது விழுகின்றன. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ... என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தங்கவேல், சமூக ஆர்வலர்.

குப்பை கூளமும், சாய்ந்த கம்பமும்...



சென்னை குரோம்பேட்டை சேம்பர்ஸ் காலனி பிரதான சாலையோரம் குப்பைகள் அதிகளவு குவிந்திருக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் சூழலும் எழுந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள கம்பமும் சாய்ந்து கிடக்கிறது. இதுவும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை சரிசெய்யும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஈடுபட வேண்டும்.

- சரவணன், சேம்பர்ஸ் காலனி.

கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பல்லாவரம் 12-வது வார்டு திருவள்ளுவர் நகர் அண்ணா தெருவில் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் சூழ்ந்து கழிவுநீர் தேங்கி கிடக்கின்றன. பல வீடுகளில் கழிவுநீர் புகுந்து வருகின்றது. இதனால் தெருவில் குடியிருப்போர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே கழிவுநீர் கால்வாய் அடைப்பு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

- தென்றல், பல்லாவரம்.

மின் இணைப்பு பெட்டி சீரமைக்கப்படுமா?



சென்னை கொளத்தூர் சிலந்திகுட்டை மோகனம் தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டியில் கேபிள்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கின்றன. பெட்டியின் கதவும் லேசாக திறந்து கிடக்கிறது. சிறுவர்கள் அதிகம் விளையாடும் பகுதி என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மின் இணைப்பு பெட்டியை சீரமைத்து தர மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொதுமக்கள், மோகனம் தெரு.

குப்பை கழிவுகளால் அவதி

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பாள் நகர் பாலாஜி அவென்யூ பகுதியில் சாலையோரம் கழிவுநீர் சூழ்ந்து, அதில் பெருமளவு குப்பை கழிவுகளும் தேங்கி கிடக்கிறது. அப்பகுதியில் மாடுகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது. துர்நாற்றம் மிகுதியாக இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்வதில் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.

- பொதுமக்கள், அம்பாள் நகர்.

காட்சி பொருளாக இருக்கும் மின்விளக்கு

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பேரூராட்சியில் உள்ள மின்வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள சீனிவாச நகரில் உள்ள மின்கம்பத்தில் ஒரு வருடமாக மின் விளக்கு எரியாமலேயே உள்ளது. இதனால் அப்பகுதிவாசிகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் அருகில் உள்ள கடைகளுக்கு செல்லக்கூட சிரமப்படுகிறார்கள். காட்சி பொருளாக இருக்கும் இந்த மின்விளக்கை சரிசெய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மிகவும் பயனுள்ள நடவடிக்கையாக அமையும்.

- பொதுமக்கள், சீனிவாசநகர்.

குப்பை கூளமான தெரு



காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் ஏகனாம்பேட்டை நடுத்தெருவில் குப்பைகள் மிகுதியாக கொட்டப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த தெருவே குப்பை கொட்டும் இடமாகவே காட்சி தருகிறது. தேங்கி கிடக்கும் குப்பைகளில் இருந்து பரவும் கொசுக்களால் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு பல்வேறு நோய்களும் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

- பொதுமக்கள், ஏகனாம்பேட்டை.

Next Story