ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி


ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி
x
தினத்தந்தி 11 Dec 2021 8:44 PM IST (Updated: 11 Dec 2021 8:44 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி

தளி, 
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நிறைவடைந்து  இறுதி அறிக்கை கோவையில் உள்ள கள இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வன விலங்குகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகு பூனை, குரைக்கும் மான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர் காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குளிர்கால கணக்கெடுப்பு பணி கடந்த 4-ந் தேதி பயிற்சியுடன் தொடங்கியது.
53 நேர்கோட்டு பாதைகள்
இதுகுறித்து உதவி வனப்பாதுகாவலர் க.கணேஷ்ராம் கூறியதாவது:-
கணக்கெடுப்பு பணிக்கு ஏதுவாக உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம் வந்தரவு வனச்சரகங்களில் உள்ள 34 சுற்றுகளில் 53 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டது.  
 வனப்பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது முதல் 3 நாட்களில் சுற்றுகளில் காணப்பட்ட புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.
அறிக்கை தயார்
அடுத்த 3 நாட்களில் நேர்கோட்டுப்பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்பட்ட இறை விலங்குகள், தாவரங்கள், மனித இடையூறுகள், குளம்பினங்களின் எச்சம் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது. மேலும் அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட்டது. 
இறுதி நாளான நேற்று கணக்கெடுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு கோவையில் உள்ள கள இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
கணக்கெடுப்பு பணியில் வனச்சரகஅலுவலர்கள் தனபாலன், சுரேஷ், முருகேசன், மகேஷ் உள்ளிட்ட வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர்.

Next Story