தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,732 வழக்குகளுக்கு தீர்வு
நாகையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,732 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் ரூ.7¾ கோடி வசூல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,732 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் ரூ.7¾ கோடி வசூல் செய்யப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
நாகை மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கிங்ஸ்லி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். மாவட்ட நீதிபதிகள் தமிழரசி, பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இருந்து விபத்து வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள், நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகள் உள்பட 3,927 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 1,732 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
ரூ.7 கோடியே 75 லட்சம் வசூல்
வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இழப்பீட்டு தொகையாக மாவட்ட முதன்மை நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் ரூ.18,50,000-க்கான காசோலையை வழங்கினார். மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் ரூ.7 கோடியே 75 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கார்த்திகா, சார்பு நீதிபதி ஜெகதீசன், மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபா உள்பட குற்றவியல் நீதித்துறை நடுவர்கள், வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுரேஷ்குமார் செய்திருந்தார்.
Related Tags :
Next Story