திருவாரூரில் மாணவர் பெருமன்றம் சார்பில் உண்ணாவிரதம்


திருவாரூரில் மாணவர் பெருமன்றம் சார்பில் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 11 Dec 2021 10:18 PM IST (Updated: 11 Dec 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி திருவாரூரில் மாணவர் பெருமன்றம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

திருவாரூர்:
நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி திருவாரூரில் மாணவர் பெருமன்றம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சியினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் என வாக்குறுதி அளித்திருந்தது.
இதையடுத்து தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக கவர்னரிடம் சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்தை வழங்கினார். 
உண்ணாவிரதம் 
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூர் புதிய ரெயில் நிலையம் முன்பாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். உண்ணாவிரத போராட்டத்தை மாரிமுத்து எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் மாணவர் பெருமன்றத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பகத்சிங், கோபி, மாவட்ட பொருளாளர் நல்லசுகம், மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர்கள் பாரதசெல்வன், சிவனேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தை செல்வராசு எம்.பி. முடித்து வைத்தார்.

Next Story