நாமக்கல் மாவட்டம் முழுவதும் மக்கள் நீதிமன்றத்தில் 1,985 வழக்குகளுக்கு தீர்வு


நாமக்கல் மாவட்டம் முழுவதும் மக்கள் நீதிமன்றத்தில் 1,985 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 Dec 2021 10:41 PM IST (Updated: 11 Dec 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,985 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

நாமக்கல்:
மக்கள் நீதிமன்றம்
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கினார். நீதிபதிகள் பாலசுப்பிரமணியம், நந்தினி, சுந்தரையா, சரவணன், ஸ்ரீவித்யா, முருகன், மாலதி, ரேவதி, விஜய் அழகிரி, தமயந்தி, ஜெயந்தி, ஹரிஹரன், கபாலீஸ்வரன், பிரியா மற்றும் வக்கீல்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதில் விபத்து தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள் மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய உள்ள தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கு சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாண வழிவகை செய்யப்பட்டது.
1,985 வழக்குகளுக்கு தீர்வு
குறிப்பாக சேலத்தை சேர்ந்த விஜய்பிரபு (வயது 41) என்பவர், விபத்தில் தனது இடது கையை இழந்தார். அவருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.33 லட்சத்து 75 ஆயிரத்து 810 கொடுத்ததை தொடர்ந்து, அந்த வழக்கில் சமரச தீர்வு ஏற்பட்டது. இதில் வக்கீல்கள் கணபதி, வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மக்கள் நீதிமன்றத்தை பொறுத்த வரையில் வென்றவர், தோற்றவர் என வேறுபாடு கிடையாது எனவும், இங்கு வழங்கப்படும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் (பொறுப்பு) ஸ்ரீவித்யா செய்து இருந்தார்.
இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி கோர்ட்டிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 6,571 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இவற்றில் 1,985 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.18 கோடியே 55 லட்சத்து 38 ஆயிரத்து 133 செலுத்தி பைசல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story