ராசிபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 600 கிலோ குட்கா பறிமுதல்-மளிகை கடைக்காரர், லாரி டிரைவர் கைது


ராசிபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 600 கிலோ குட்கா பறிமுதல்-மளிகை கடைக்காரர், லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2021 10:41 PM IST (Updated: 11 Dec 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 600 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மளிகை கடைக்காரர், லாரி டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

ராசிபுரம்:
போலீசார் கண்காணிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு புகையிலை விற்பவர்களை அதிரடியாக கைது செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ராசிபுரம் டவுன் காட்டூர் ரோடு பகுதியை சேர்ந்த மளிகை கடைக்காரர் செந்தில் (வயது 39) தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம், தங்கம் மற்றும் போலீசார் செந்திலுக்கு சொந்தமான மளிகை கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
குட்கா பதுக்கல்
அப்போது அவரது கடையில் 100 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்ய போலீசார், செந்திலை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெங்களூருவில் இருந்து ராசிபுரத்துக்கு கன்டெய்னர் லாரி ஒன்றில் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக அவர் கூறினார். அதன்பேரில் போலீசார் சேலம் சாலையில் வைரமலை ஆஞ்சநேயர் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
பெங்களூருவில் இருந்து கடத்தல்
அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் மூட்டை, மூட்டையாக 500 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் குட்கா பொருட்களை, லாரியுடன் பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். 
அதில் அவர் பெங்களூருவை சேர்ந்த லட்சுமணன் மகன் மணிகண்டன் (26) என்பது தெரியவந்தது. மேலும் அவர் பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
600 கிலோ பறிமுதல்
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடைக்காரர் செந்தில், லாரி டிரைவர் மணிகண்டன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 600 கிலோ குட்காவின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.
ராசிபுரத்தில் 600 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story