எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு ரூ.1.50 கோடியில் நினைவரங்கம்- கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்


எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு ரூ.1.50 கோடியில் நினைவரங்கம்- கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 11 Dec 2021 10:52 PM IST (Updated: 11 Dec 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு ரூ.1½ கோடியில் நினைவரங்கம் கட்டுவதற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு ரூ.1½ கோடியில் நினைவரங்கம் கட்டுவதற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவரங்கம்

மறைந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற கரிசல் பூமி எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நினைவரங்கம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கோவில்பட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் செலவில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் முழு உருவச்சிைல, நூலகத்துடன் கூடிய நினைவரங்கம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கி.ராஜநாராயணன் நினைவரங்கம் அமைப்பதற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தொழில் துறை, தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

வாழ்ந்த மண்ணை சார்ந்த எழுத்து

விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “ஏறத்தாழ 100 ஆண்டு தமிழ் இலக்கிய உலக வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன். அவரது எழுத்தானது, வாழ்ந்த மண்ணையும், மனிதர்களையும் சார்ந்து இருந்தது. தனது எழுத்தால் அனைவரையும் வசீகரப்படுத்தியவர். தமிழ் இருக்கும் வரை அவரது புகழ் நிலைத்து இருக்கும்” என்றார்.

தமிழுக்கு தொண்டாற்றியவர்

விழாவில் கனிமொழி எம்.பி. பேசுகையில், “தமிழ் இலக்கியம் எழுத வேண்டும் என்றால், இப்படித்தான் எழுத வேண்டும் என்ற கட்டமைப்பு இருந்தது. அதனை உடைத்து நொறுக்கி மாற்றியவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். அவரது எழுத்து நடைக்கு பின்னர்தான் வட்டார வழக்குமொழியை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு வித்திட்டு மக்களின் வாழ்க்கைதான் இலக்கியம் என்பதை உணர வைத்துள்ளார். எழுத்தாளர் கி.ரா. அதிக நினைவாற்றலுடன் மிக தெளிவாக எழுதும் ஆற்றலுடன் இறுதிவரை தமிழுக்கு தொண்டாற்றினார். அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் நினைவரங்கம் அமையவுள்ளது” என்றார்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் 50 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு வேளாண்மை உபகரணங்கள், தொழில் கருவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, முதியோர், விதவைகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை போன்றவை வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மகன் பிரபாகரன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன், ராதாகிருஷ்ணன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், யூனியன் ஆணையாளர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story