தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுசீந்திரம்,
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மார்கழி திருவிழா
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழிதிருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜையும், 7.30 மணிக்கு கொடி பட்டத்தை மேள தாளத்துடன் 4 ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்வதும் நடந்தது.
கொடியேற்றம்
அதைத்தொடர்ந்து காலை 8.10 மணிக்கு நித்திய காரிய யோக ஸ்தானிகர் ஆதிசேஷ் நம்பூதிரி கொடி பட்டத்தை பெற்று, தாணுமாலயன் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் மேளதாளம் பஞ்சவாத்தியம் முழங்க ஏற்றினார். கொடி பீடத்திற்கு சிறப்பு பூஜைகளை வட்ட பள்ளிமடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா முன்னிலையில் டாக்டர் பிரசாத் நடத்தி, அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு மண் மடம் திலீபன் நம்பூதிரி, அரசு வக்கீல் மதியழகன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், கோவில் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மராமத்து பொறியாளர்கள் அய்யப்பன், ராஜ்குமார், மேலாளர் ஆறுமுகதரன், முன்னாள் கண்காணிப்பாளர் சோணாசலம், கணக்கர் கண்ணன், சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடக சங்க நிர்வாகிகள், பக்த சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
வாகன பவனி
அதைத்தொடர்ந்து சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய 3 தேர்களுக்கும் கால் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திருமுறை பேரவை சார்பிலும், தாணுமாலயன் பக்தர்கள் சங்கம் சார்பிலும் ரத வீதியை சுற்றி திருமுறை பெட்டக ஊர்வலம் நடைபெற்றது.
திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், அலங்கார தீபாராதனை, சமய சொற்பொழிவு, சொல்லரங்கம், பக்தி இன்னிசை, மெல்லிசை, பரத நாட்டியம், இசை சங்கமம், நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
மக்கள்மார் சந்திப்பு
நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், இரவு 10.30 மணிக்கு சாமி வீதி உலா வரும்போது கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசாமி தனது தாய் தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காண வரும் மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
15-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், காலை 6 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோவில் முன் சுவாமி, அம்பாள், பெருமாள் மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் காட்சியும் நடக்கிறது. 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.
தேரோட்டம்
19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ணக்காட்சியும், திருவிழாவின் இறுதி நாளான 20-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், இரவு 9 மணிக்கு ஆராட்டு விழாவும் நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடக சங்கமும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story