ராமேசுவரம், திருஉத்தரகோசமங்கை கோவில்களில் ஆருத்ரா திருவிழா


ராமேசுவரம், திருஉத்தரகோசமங்கை கோவில்களில் ஆருத்ரா திருவிழா
x
தினத்தந்தி 11 Dec 2021 11:04 PM IST (Updated: 11 Dec 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் மற்றும் திருஉத்தரகோசமங்கை கோவில்களில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

ராமேசுவரம்
ராமேசுவரம் மற்றும் திருஉத்தரகோசமங்கை கோவில்களில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
ஆருத்ரா திருவிழா
தமிழகம் முழுவதுமுள்ள நடராஜர் கோவில்களில் நேற்று திருவாதிரை ஆருத்ரா திருவிழா, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்தநிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சபாபதி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு நேற்று காலை காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து மாணிக்கவாசகருக்கும் காப்பு கட்டப்பட்டு சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.
ஆருத்ரா திருவிழாவையொட்டி இன்று முதல் வருகிற 19-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு காலை மற்றும் இரவில் மாணிக்கவாசகர் தங்க கேடயத்தில் மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 20-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். அபிஷேகத்திற்கு பின்னர் நடராஜருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடத்தப்பட்டு திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.
திருஉத்தரகோசமங்கை 
இதேபோல் தமிழகத்தில் உள்ள மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாக விளங்கும் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலிலும் ஆருத்ரா திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கோவிலில் உள்ள உற்சவ நடராஜருக்கும், மாணிக்கவாசகருக்கும் காப்பு கட்டப்பட்டு தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. இன்று முதல் இன்னும் ஒரு வாரத்திற்கு மாணிக்கவாசகர் புறப்பாடு நிகழ்ச்சியும் கோவிலில் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி காலை 9 மணி அளவில் கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதியின் கதவுகள் திறக்கப்பட்டு நடராஜர் மீது போடப்பட்டுள்ள சந்தனங்கள் களையப்படும். அதன் பின்னர் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மரகத நடராஜர் சிலை மீது சந்தனாதி தைலம் பூசப்படும். 19-ந்தேதி பகல் முழுவதும் பக்தர்கள் மரகத நடராஜரை தரிசனம் செய்யலாம்.
 நள்ளிரவு முதல் மீண்டும் நடராஜருக்கு 32 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சூரிய உதய நேரத்தில் மரகத நடராஜர் மீது மீண்டும் சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை நடத்தப்படும். பின்னர் அன்று பகலில் மரகத நடராஜர் சன்னதி  மூடப்படும். ஆண்டில் ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதி முழுமையாகத் திறந்து பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழா ஏற்பாடுகளை திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் கோவிலின் சரக பொறுப்பாளர் சரண்யா மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story