திருமண நாளில் மணப்பெண் காதலனுடன் ஓட்டம்
பூதப்பாண்டி அருகே உள்ள புதுப்பெண் திருமண நாளில் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால், மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருகே உள்ள புதுப்பெண் திருமண நாளில் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால், மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ஆசிரியை
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார். இவருக்கும் மதுரையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் நேற்று முன்தினம் மதுரையில் நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி இருவீட்டாரும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து திருமணத்திற்கு வரவழைத்து இருந்தனர்.
மேலும், மணப்பெண்ணும், அவரது பெற்றோரும், உறவினர்களும் மதுரைக்கு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். அங்கு சென்றதும் அவர்களை மணமகன் குடும்பத்தினர் வரவேற்றனர்.
தொடர்ந்து மணப்பெண் உள்பட பெண்ணின் குடும்பத்தினர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
காதலனுடன் ஓட்டம்
இந்தநிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் மணப்பெண் குளியலறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து உறவினர்கள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. அதாவது, அந்த இளம்பெண், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த என்ஜினீயரிங் படித்த வாலிபரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இளம்பெண்ணை வேறு இடத்தில் மணமுடித்து கொடுக்க முடிவு செய்தனர். முதலில் பெற்றோரின் முடிவுக்கு சம்மதம் தெரிவிப்பது போல் இளம்பெண் நடித்துள்ளார். ஆனால், திருமண நாளில் காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.
மணமகன் அதிர்ச்சி
இந்த தகவல் சிறிது நேரத்தில் திருமண மண்டபத்தில் பரவியது. இதை அறிந்த மணமகனும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அத்துடன், திருமண செலவுக்கான தொகைைய தரும்படி பெண் வீட்டாரிடம் கேட்டனர். இதையடுத்து பெண் வீட்டாரும் வேறு வழியின்றி பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டனர்.
திருமணத்திற்காக தயாரான பலவகை உணவு பதார்த்தங்கள் வீணானது. திருமணத்துக்கு வந்தவர்கள் விவரம் தெரிந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மணகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் மதுரையில் இருந்து வீடு திரும்பினர். இந்த சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story