தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை


தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு  தீர்வு காண நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Dec 2021 11:44 PM IST (Updated: 11 Dec 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வு கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

நாகர்கோவில், 
அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வு கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
ஆய்வு கூட்டம்
தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் ரப்பர் கழக செயல்பாடுகள் குறித்து நடந்த கலந்தாய்வு கூட்டம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் அரசு ரப்பர் கழக தொழிற்சங்கத்தினருடன் நடந்த ஆய்வு கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-.
மிகப்பெரிய மாற்றம்
1991-ம் ஆண்டு முதல் அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. 1991-ல் 50 ஆக இருந்த சம்பளம் தற்போது ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. நிர்வாகத்தால் எவ்வளவு முடியுமோ? அதை கொடுத்து வருகிறார்கள். அதனால் இனிமேல் சம்பள உயர்வு இல்லை என்று சொல்லவில்லை.
தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் உயர்த்தி வழங்க முடியுமோ அதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் வெளியிடப்பட்டது. அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக சரியாக இந்த பிரச்சினையை கையாளவில்லை. தி.மு.க. ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரே நேரத்தில் ரூ.80 வரை சம்பளத்தை உயர்த்தி வழங்கினார்.
சம்பள பிரச்சினைக்கு அடுத்த முறை நான், தொழிலாளர் துறை அமைச்சரை அழைத்து வந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வழிவகை செய்யப்படும். தொழிற்சங்க நிர்வாகிகள் பேசிய பிரச்சினைகள் அனைத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க.வின் ஆட்சியில் அரசு ரப்பர் கழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை காணப்போகிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோரிக்கைகள்
முன்னதாக கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளான ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், தொ.மு.ச. நிர்வாகிகள் இளங்கோ, நடராஜன், சி.ஐ.டி.யு. வல்சகுமார், எம்.எல்.எப். பால்ராஜ் மற்றும் சந்திரசேகர், தி.மு.க. நிர்வாகி மேக்லின் ஜவகர், மரம் அறுவை ஆலை உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த பால்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
அப்போது அவர்கள், அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும், ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கு எதிராக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும், ரப்பர் தோட்ட பரப்பை அதிகரிக்க வேண்டும், வீடுகளில் வளர்க்கப்படும் அயனி மரங்களை வெட்ட வனத்துறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும், அரசு ரப்பர் கழகத்தால் உற்பத்தி செய்யப்படும் பாலில் கையுறைகள் போன்றவற்றை அரசு சார்பில் தயாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அதிகாரிகள்
இந்த கூட்டங்களில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் அரசு ரப்பர் கழக தலைவர் சையத் முஜம்மில் அப்பாஸ், அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் (அரசு ரப்பர் கழகம்) தின்கர் குமார், பொதுமேலாளர் குருசாமி, மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா, பிரின்ஸ் எம்.எல்.ஏ. குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், நாகர்கோவில் மாநகர தி.மு.க. செயலாளர் மகேஷ், தி.மு.க. வக்கீல்கள் அகஸ்தீசன், முருகன், சரவணன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சுகுமாரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ரப்பர் தொழிற்சாலை ஆய்வு
பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் கீரிப்பாறையில் உள்ள அரசுக்கு சொந்தமான ரப்பர் தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு ரப்பர் கழிவுகளை மறுசுழற்சி செய்வது, ரப்பர் பால் தரம் பிரிப்பது குறித்து தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சிறப்பாக பணிபுரிந்த 2 தொழிலாளர்களுக்கு பரிசும் வழங்கினார்.
அப்போது அவரிடம், கீரிப்பாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய அளவு மருத்துவ வசதி இல்லாததால் அவசர தேவைக்கு நாகர்கோவிலுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி பெற்று தர வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அதிகாரிகள் மற்றும் அழகியபாண்டியபுரம் வனசரகர் மணிமாறன், மாவட்ட தி.மு.க. பொருளாளர் கேட்சன், தடிக்காரன்கோணம் பஞ்சாயத்து தலைவர் பிராங்கிளின், பாலமோர் பஞ்சாயத்து தலைவர் லில்லிபாய் சாந்தப்பன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் சங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story