விராலிமலை அருகே பேராம்பூர் பெரியகுளத்தில் ரூ.2¼ கோடியில் புதிய மதகு சுவர்கள் கட்டப்படும் அமைச்சர் மெய்யநாதன் தகவல்


விராலிமலை அருகே பேராம்பூர் பெரியகுளத்தில் ரூ.2¼ கோடியில் புதிய மதகு சுவர்கள் கட்டப்படும்  அமைச்சர் மெய்யநாதன் தகவல்
x
தினத்தந்தி 11 Dec 2021 11:54 PM IST (Updated: 11 Dec 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே பேராம்பூர் பெரியகுளத்தில் ரூ.2¼ கோடியில் புதிய மதகு சுவர்கள் கட்டப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

ஆவூர்:
மதகு சுவர்கள் இடிந்தன
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா பேராம்பூரில் 84 எக்டேர் பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் விவசாய பாசன பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் 6 கதவுகள் கொண்ட மதகானது சேதமடைந்து இருந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதகுகளின் பக்கவாட்டு சுவர்கள் திடீரென இடிந்து விழுந்தன. இதனால் மதகுகள் உடைந்து குளத்திலுள்ள தண்ணீர் முழுவதும் வெளியேறி விவசாய நிலங்கள் மற்றும் அப்பகுதி கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து சேதத்தை ஏற்படுத்துவதுடன் கோரையாறு வழியாக சென்று திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு நகர் பகுதிகளிலும் சேதத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டது. 
அமைச்சர் ஆய்வு 
இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராம்பூர் பெரியகுளத்தில் உடைப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் புதிய அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனிடம் அறிவுறுத்தி இருந்தார். அதைத்தொடர்ந்து நேற்று காலை அமைச்சர் மெய்யநாதன் பேராம்பூர் பெரிய குளத்தை ஆய்வு செய்தார். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
ரூ.2¼ கோடியில் புதிய மதகு சுவர்கள் 
இதைதொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- போர்க்கால அடிப்படையில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் பேராம்பூர் பெரியகுளத்தில் புதிய மதகு சுவர்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ஏரியின் பரப்பளவு 84 எக்டேர் கொண்ட மிகப்பெரிய ஏரி. 80 ஆண்டுகளுக்கு மேல் ஆன இந்த ஏரியின் கரை பகுதியில் பஸ் பயணமும் மேற்கொண்ட மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக பேராம்பூர் பெரியகுளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் கோரையாறு வழியாக கடந்து செல்கின்ற அடிப்படையில் இது அமைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆட்சியில் 10 ஆண்டு காலமாக எந்த ஒரு பொது பணித்துறை ஏரிகளையும் சரியாக தூர்வாரி பராமரிக்கவில்லை. 
குடிமராமத்து பணிகள் நடைபெறவில்லை
குடிமராமத்து பணிகள் சரிவர நடைபெறவில்லை. ஒட்டுமொத்தமாக கடந்தகால நடவடிக்கை ஒரு மோசமான நடவடிக்கைகள். கடந்த காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் பராமரிப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகளில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது. அந்த அடிப்படையில் குடிமராமத்து பணிகள் சரியாக நடந்திருந்தால் கண்டிப்பாக இந்த வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு அதிகமாக இருந்திருக்காது. நாம் அதிக மழை நீரை சேமித்து வைத்திருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story