தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்திற்கு நாள்தோறும் காலை 8:15 மணிக்கு 3பி என்ற எண் கொண்ட அரசு நகர பஸ் பீல்வாடி கிராமத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. தற்போது இந்த வழித்தடத்தில் பஸ் இயக்கப்படாததால் அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மேற்கண்ட வழித்தடத்தில் பஸ்சை இயக்கினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
குமார், செங்குணம், பெரம்பலூர்.
கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியே செல்ல வடிகால் வசதி இல்லை. இதனால் பஸ் நிலையத்தின் உள்ளே கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதனை பயணிகள் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் தேங்காமல் இருக்க பஸ் நிலையத்தில் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரிகரன், பெரம்பலூர்.
நிறுத்தப்பட்ட காவிரி கூட்டு குடிநீர்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ராஜாளிபட்டி ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கு தண்ணீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ராஜாளிப்பட்டி, புதுக்கோட்டை.
அசுத்தம் செய்யப்படும் மைதானம்
கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி 15-வது வார்டில் உள்ள விளையாட்டு மைதானத்தை அப்பகுதி மக்கள், குழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிலர் இந்த மைதானத்தை அசுத்தம் செய்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சக்திவேல், தோட்டக்குறிச்சி, கரூர்.
காலையில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
அரியலூரில் இருந்து தஞ்சை செல்வதற்கும், தஞ்சையில் இருந்து அரியலூர் வருவதற்கும் காலை நேரங்களில் குறிப்பாக காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை குறைந்த பஸ்களே இயக்கப்படுகிறது. அதில் பெரும்பாலான பஸ்கள் விரைவு பஸ்களாக வருகிறது. பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. பல பஸ்கள் பஸ் நிறுத்தங்களில் நிற்பதில்லை. இதனால் சாத்தமங்கலம், வெற்றியூர், கள்ளூர் பாலம் மற்றும் முடிகொண்டான் போன்ற கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் பஸ்சில் ஏற முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். பலர் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி அரியலூர்- தஞ்சாவூர் வழித்தடத்தில் காலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் விட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வெற்றியூர், அரியலூர்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
கரூர் மாவட்டம், நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நச்சலூர் வள்ளுவர் நகர் பகுதியில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் அருகே தார் சாலையின் ஓரத்தில் குப்பைகள் மற்றும் கழிவு மூட்டைகள் கொட்டப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் ஆட்கள் நட மாட்டம் இல்லாதபோது குப்பை மூட்டைகளை போட்டு விட்டு சென்று விடுகின்றனர். பேரூராட்சி ஊழியர்கள் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் பல நாட்களாக இருந்து வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், நச்சலூர், கரூர்.
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையிலிருந்து ராஜகிரி, மலைக்குடி, இலுப்பூர் வழியாக புதுக்கோட்டைக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இவ்வழியாக தினமும் கனரக வாகனங்கள், பஸ்கள், இருசக்கர வாகனங்கள் என ஒரு நாளைக்கு 500-க்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் விராலிமலை பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக இச்சாலையானது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் இவ்வழியாக செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அதனை கவனிக்காமல் அவ்வப்போது சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் கிராவல் மண்ணை இச்சாலையில் இருந்த பள்ளங்களில் கொட்டி தற்காலிகமாக சரி செய்தனர். ஆனால் அதன்பிறகு பெய்த ஒரு நாள் மழையிலேயே அந்த சாலை மீண்டும் சேதமடைந்தது. இதனால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்னரே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், விராலிமலை, புதுக்கோட்டை.
கோமாரி நோயால் பாதிக்கப்படும் கால்நடைகள்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், உப்பிலியபுரம், திருச்சி.
குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், எசனைக்கோரை புதுத்தெருவில் உள்ள சாலையோரத்தில் அப்பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி குப்பை மேடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், எசனைக்கோரை, திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பாலையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரும் புதூர் கிராமத்தில் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் காலையில் பஸ் மூலம் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பஸ்சை பொறுமையாக இயக்க வேண்டிய நிலை உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலையின் குறுக்கே செல்லும் பாலமும் உடைந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரும்புதூர், திருச்சி.
பொதுகிணறு சுத்தம்செய்யப்படுமா?
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் உள்ள ராயன்பட்டி எஸ்.சி. தெருவில் உள்ள பொதுக்கிணறு குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் இந்த கிணற்றை பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கிணற்றை சுத்தம் செய்து தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ராயன்பட்டி, திருச்சி.
சாலையில் செல்லும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நெய்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நெடுங்கூர் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் செல்கிறது. மேலும் இவை தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்பதினால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், நெடுங்கூர், திருச்சி.
அடிப்படை வசதி இன்றி பொதுமக்கள் அவதி
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, வேளங்காநத்தம் ரோடு, லட்சுமி நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, தெரு விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மழைபெய்யும்போது சேறும், சகதியுமான சாலையில் பயணம் செய்வதுடன் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த இப்பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருக்குமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வர்ஜானா, முசிறி, திருச்சி.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு வேண்டும்
திருச்சி கோர்ட் ரோடு ஹீபர்ரோடு பகுதியில் உள்ள வ.உ.சி. சிலை சாலையில் எப்போதும் வாகனங்கள் அதிக அளவில் வருவது வழக்கம். மேலும் இந்த பகுதியில் சிக்னல் உள்ள நிலையில், இப்பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் உள்ள டீ கடைகள், பழக்கடைகளில் கோர்ட்டுக்கு வருபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே சாலையோரத்தில் நிறுத்தி விட்டு, டீ குடிப்பதும், தின்பண்டங்கள் வாங்கி சாப்பிடுவதுமாக உள்ளனர். இதனால் இந்த பகுதியில் எப்போதும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுமதி, திருச்சி.
Related Tags :
Next Story