கரூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 738 வழக்குகளுக்கு தீர்வு
கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 738 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கரூர்,
738 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுரையின்படி கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கிறிஸ்டோபர் மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
கரூரில் 4 அமர்விலும், குளித்தலையில் 2 அமர்விலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், மொத்தம் 738 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு காணப்பட்ட வழக்குகளில் மொத்த தொகை ரூ.17 கோடியே 16 லட்சத்து 84 ஆயிரத்து 404 ஆகும்.
காசோலை மோசடி வழக்கு
மேலும் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் வங்கிகளிடமிருந்து பெற்ற கடன்களை திரும்ப செலுத்தும் வகையில் 150 வாராக்கடன்களில் 80 கடன் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அவ்வாறு தீர்வு காணப்பட்ட தொகை ரூ.95 லட்சத்து ஆயிரம் ஆகும்.
மோட்டர் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க தலைமை நீதித்துறை நடுவர் ராஜலிங்கம், வக்கீல் பாரதிதாசன், முதன்மை சார்பு நீதிபதி பாரதி, வக்கீல் குப்புசாமி ஆகியோர் கொண்ட அமர்வு ஏற்படுத்தப்பட்டது. சொத்து, பணம் மற்றும் இதர சிவில் காசோலை மோசடி வழக்குகளை விசாரிக்க கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி சரவண பாபு, ராஜலட்சுமி, மகேந்திர வர்மா, வக்கீல் சவுமியா ஆகியோர்களை கொண்ட அமர்வும், குளித்தலையில் 2 அமர்வும் நடைபெற்றது.
விபத்து காப்பீட்டு வழக்கு
நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு பைசல் செய்யப்பட்டு காயம்பட்ட, பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.4 லட்சத்து 69 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் விபத்து காப்பீட்டு வழக்குகளில் 242 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு மொத்த தொகை ரூ.8 கோடியே 83 லட்சத்து 27 ஆயிரத்து 604 மற்றும் சிவில் வழக்குகளில் 81 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு மொத்த தொகை ரூ.7 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரத்து 500 முடிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மோகன்ராம் செய்திருந்தார்.
Related Tags :
Next Story