கோவில் மண்டபத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபரால் பரபரப்பு


கோவில் மண்டபத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Dec 2021 12:40 AM IST (Updated: 12 Dec 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

துவரங்குறிச்சி அருகே கோவில் மண்டபத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

துவரங்குறிச்சி, டிச.12-
துவரங்குறிச்சி அருகே கோவில் மண்டபத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் முன்மண்டபத்தில் உடல்
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த முக்கன்பாலம் அருகே ஆதிசொக்கநாதர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
நேற்று காலை அந்த கோவில் முன் மண்டபத்தில் ஆண் ஒருவர் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். யாரோ அவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட நபருக்கு சுமார் 40 வயது இருக்கும். மேலும் அவர் ரோஸ் நிறத்தில் ஜிப்பாவும், மஞ்சள் நிறத்தில் வேட்டியும் அணிந்திருந்தார். இதுமட்டுமின்றி தாடி மற்றும் குடுமியும் இருந்தது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதனையடுத்து  திருச்சி தடயவியல் நிபுணர் மற்றும் மோப்பநாய் பிரிவிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வந்த அவர்கள் விரல் ரேகையும் பதிவு செய்து கொண்டனர். மோப்பநாய் ஸ்பார்க் கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மோப்பம் பிடித்து விட்டு பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் சென்று தாழம்பாடி சாலையில் சென்று நின்றது. இதற்கிடையே திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார், மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜனனிபிரியா ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. மேலும் அவரது முகத்தில் சில இடங்களில் வெட்டுக்காயங்களும் இருந்தன.
மேலும் அவரை கொலை செய்தவர்கள் யார்? என்றும், எதற்காக கொலை செய்தார்கள் என்ற விவரமும் தெரியவில்லை. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்பே வந்த தகவல்
நேற்றுமுன்தினம் இரவு அந்த பகுதியில் ஒருவர்  கத்தி மற்றும் சில பொருட்களுடன் அமர்ந்திருந்தார். அங்கு பொதுமக்கள் சென்றதை பார்த்து அவர் ஓட்டம் பிடித்து விட்டார். பின்னர் இதுபற்றி பொதுமக்கள் துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அங்கு ஒரு போலீஸ்காரர் சென்று அங்கிருந்த பொருட்களில் சிலவற்றை மட்டும் துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றார். அதன்பின்னர் அந்த பகுதிக்கு எந்த போலீசும் செல்லவில்லை. மேலும் அந்த பகுதியில் யாரேனும் உள்ளனரா என்பதைக் கூட பார்க்கவில்லை. இந்த நிலையில் தான் நேற்று காலை இப்படி ஒரு கொலை சம்பவம் அரங்கேறி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். போலீசார் கூடுதல் கவனம் செலுத்தினால் இந்த கொலை நடந்து இருக்காது என்றும் தெரிவித்தனர். கோவில் மண்டபத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story