நெல்லையப்பர், செப்பறை கோவில்களில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்


நெல்லையப்பர், செப்பறை கோவில்களில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 12 Dec 2021 1:04 AM IST (Updated: 12 Dec 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையப்பர், செப்பறை கோவில்களில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை:
நெல்லையப்பர், செப்பறை கோவில்களில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவாதிரை திருவிழா

நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கோவிலில் இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை திருவிழா நேற்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. 

19-ந் தேதி, தேரோட்டம்

7-ம் திருநாளான வருகிற 17-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேல் அழகிய கூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். மாலை 4 மணிக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.
8-ம் திருநாளான 18-ந்தேதி காலை 10 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், மாலை 5 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தீப பூஜை நடைபெறுகிறது.

9-ம் திருநாளான 19-ந்தேதி காலை 11 மணிக்கு மேல் அழகிய கூத்தர் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேரோட்டமும் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

ஆருத்ரா தரிசனம்

20-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5.30 மணிக்கு கோபூஜை, ஆருத்ரா தரிசனம் நடைபெறும். மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மதியம் 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலா வருதல், மாலை 5 மணிக்கு பஞ்சமுக அர்ச்சனை, இரவு 7.30 மணிக்கு பிற்கால அபிஷேகம், இரவு 10 மணிக்கு அழகிய கூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளல் நடக்கிறது.

நெல்லையப்பர் கோவில்

இதேபோல் நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 7.15 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடக்கிறது. 19-ந்தேதி தாமிரசபையில் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறும். 20-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு நடராஜர் திருநடன காட்சியும், ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.
20-ந்தேதி வரை பெரியசபாபதி சன்னதி முன்பு அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை திருவெண்பாவை வழிபாடு நடைபெறுகிறது.

Next Story