சேலம் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்:4,822 வழக்குகளுக்கு சமரச தீர்வு
சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,822 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,822 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. அதன்படி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை தாங்கி மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஆபிரகாம் லிங்கன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தங்கராஜ் உள்பட நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
சமரச தீர்வு
சேலம், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 869 வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றில் 4 ஆயிரத்து 822 வழக்குகளுக்கு உடனடி சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.37 கோடியே 13 லட்சத்து 4 ஆயிரத்துக்கு தீர்வு ஏற்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சாலை விபத்து வழக்கு ஒன்றில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.18 லட்சத்து 44 ஆயிரம் வழங்குவதற்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டதால் சமரச முறையில் தீர்ப்பு காணப்பட்டது.
சங்ககிரி
ஆத்தூர் அருகே உள்ள காமக்காபாளையம் கிராமம் வேதநாயக்கபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 26). இவர் கடந்த ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கி 2 கால்களையும் இழந்தார். இதையடுத்து அவர் ரூ.90 லட்சம் இழப்பீடு கேட்டு சங்ககிரி சார்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சங்ககிரி சார்பு கோர்ட்டு நீதிபதி உமா மகேஸ்வரி தலைமையில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் முடிவில் வெங்கடேசுக்கு அந்த நிறுவனம் ரூ.52 லட்சம் வழங்க உடன்பாடு ஏற்பட்டு சமரச முறையில் தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story