ரெயில் நிலையங்களில் புகைப்பிடித்தவர்களிடம் ரூ.32 ஆயிரம் அபராதம் வசூல்
கடந்த 9 நாட்களில் ரெயில் நிலையங்களில் புகைப்பிடித்தவர்களிடம் இருந்து ரூ.32 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகைப்பிடித்தவர்களுக்கு அபராதம்
ரெயில் நிலையங்கள், ரெயில்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், வெடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி கொண்டு செல்பவர்களை ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து பயணிகளிடையே ரெயில்வே பாதுகாப்புபடை போலீசார், ரெயில்வே அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.சென்னை ரெயில்வே கோட்டத்தில் கடந்த 9 நாட்களில் மட்டும் ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் புகைப்பிடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரெயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதன்படி, 161 வழக்குகள் பதிந்து, அவர்களிடம் இருந்து 32 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தீ விபத்து
சமீப நாட்களாக ரெயில் பெட்டி கழிவறைகளில் உள்ள குப்பைத்தொட்டிகளில் அதிகளவில் சிகரெட் துண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன. குப்பைத்தொட்டிகளில் சிகரெட் துண்டுகள் வீசப்படுவதால் அதில் கிடக்கும் பாலிதீன் கவர்கள், பேப்பர்களில் தீ பிடித்து விபத்து ஏற்படுகிறது.சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடந்த உத்தம்பூர்-துர்க் எக்ஸ்பிரஸ் ரெயில் தீ விபத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். ஏற்கனவே பொது இடங்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தீ விபத்து சம்பவங்களை தடுக்க ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் புகைப்பிடிப்பவர்களை டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, ரெயில்வே சட்டம் 167-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வருடத்தில் சென்னை ரெயில்வே கோட்டத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் ரெயில் நிலையங்களில் சிகரெட் பிடித்த 168 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 140 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.15 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story