கூடலூர் அருகே இரும்பு கம்பியால் அடித்து பெண் படுகொலை வெறிச்செயலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் போலீசில் சரண்


கூடலூர் அருகே  இரும்பு கம்பியால் அடித்து பெண் படுகொலை  வெறிச்செயலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 12 Dec 2021 8:35 PM IST (Updated: 12 Dec 2021 8:35 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே இரும்பு கம்பியால் அடித்து பெண் படுகொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் போலீசில் சரண் அடைந்தார்.

கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி வடக்கு இந்திரா காலனியை சேர்ந்தவர் பவுன்சாமி (வயது 36). இவர், கம்பம் பழைய பஸ் நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். 
இவருக்கும், மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த சுகன்யா என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.
இந்தநிலையில் பவுன்சாமி, லட்சுமி என்ற விஜயராணியை (36) கடந்த 4 வருடங்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டு  குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள தனது வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார்.
 அடித்து கொலை 
இந்த வீட்டிற்கு எதிரே பவுன்சாமியின் தாய்மாமனான தனபாலன் மனைவி பரமேஸ்வரி (50) வசித்து வந்தார். இவருக்கும், பவுன்சாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை பரமேஸ்வரி அங்குள்ள தெரு குழாயில் துணி துவைத்து கொண்டு இருந்தார். அப்போது பவுன்சாமி, தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த இரும்புகம்பியால் பரமேஸ்வரியின் தலையில் அடித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பின்னர் கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பியுடன் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று பவுன்சாமி சரண் அடைந்தார். சம்பவம் நடந்த இடம், கூடலூர் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும். 
 கொலைக்கான காரணம் 
இதனையடுத்து கம்பம் போலீசார், கூடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கம்பத்துக்கு சென்று அவரை கூடலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது:-
பவுன்சாமி 2-வது திருமணம் செய்த நாளில் இருந்து, அடிக்கடி விஜயராணியுடன் பரமேஸ்வரி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் பரமேஸ்வரி, விஜயராணியை விளக்குமாறால் அடித்ததாக தெரிகிறது. இதில் விஜயராணியின் கையில் விளக்குமாறின் குச்சிகள் குத்தி புண்ணாகியது.
 இதையடுத்து அவர், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விஜயராணிக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தது. இதன் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் கடந்த செப்டம்பர் மாதம் 2-ந் தேதி பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்த துக்கம் பவுன்சாமியை மிகவும் வாட்டியது. 
கைது-பரபரப்பு
இதனிடையே விஜயராணி இறந்தததால் பரமேஸ்வரி பயந்துபோய் தனது வீட்டில் வசிக்காமல் அதே ஊரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். பின்னர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பரமேஸ்வரி மீண்டும் தனது வீட்டிற்கு குடி வந்தார். இது பவுன்சாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 
விஜயராணியின் சாவுக்கும், தான் தனியாக வசித்து கஷ்டப்படுவதற்கும் பரமேஸ்வரிதான் காரணம் என்று அவர் கருதினார். எனவே பரமேஸ்வரியை கொலை செய்ய பவுன்சாமி முடிவு செய்தார். 
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அவர் கம்பத்தில் உள்ள ஒரு கடையில் இரும்பு கம்பியை வாங்கினார். அதனை வைத்து பரமேஸ்வரியில் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். 
இவ்வாறு போலீசார் கூறினர். இதற்கிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து பவுன்சாமியை கைது செய்தனர். மேலும் பரமேஸ்வரியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story