வருசநாடு அருகே வனப்பகுதியில் பதுக்கிய 75 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது


வருசநாடு அருகே  வனப்பகுதியில் பதுக்கிய 75 கிலோ கஞ்சா பறிமுதல்  2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2021 9:22 PM IST (Updated: 12 Dec 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே வனப்பகுதியில் பதுக்கிய 75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடமலைக்குண்டு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகே பண்டாரவூத்து வனப்பகுதியில் சிலர், மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன் தலைமையில், கடமலைக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று பண்டாரவூத்து வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 
அப்போது வனப்பகுதியில் பளியன்பாறை என்ற இடத்தில் முட்புதரில் 3 சாக்கு மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட போலீசார், அந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர். 
அப்போது ஒவ்வொரு சாக்கு மூட்டையிலும் தலா 25 கிலோ வீதம் மொத்தம் 75 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் அந்த கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை பதுக்கி வைத்தவர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். 
2 பேர் கைது
இதில் கஞ்சா பதுக்கி வைத்தது மதுரை மாவட்டம் காளப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த உதயன் (வயது 34), பண்டாரவூத்தை சேர்ந்த ஜோதிபாசு (33) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருசநாடு பகுதியில் சுற்றித்திரிந்த அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். 
பின்னர் அவர்களை வருசநாடு போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கஞ்சா பதுக்கியதில் உசிலம்பட்டியை சேர்ந்த விஜி, காளப்பன்பட்டியை சேர்ந்த செல்வேந்திரன் ஆகிய 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அந்த 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 
இதற்கிடையே கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது? என்பது தொடர்பாக கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story