திருவள்ளூர் டாஸ்மாக் கடையில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மதுபானம் விற்றால் ஊழியர்கள் மீது நடவடிக்கை
திருவள்ளூர் டாஸ்மாக் கடையில் நகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மதுபானம் விற்கக்கூடாது என ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
கொரோனா தடுப்பூசி
தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதையொட்டி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சினிமா தியேட்டர், டாஸ்மாக் கடை, வணிக வளாகம் ஆகிய இடங்களில் வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது.
இதற்கான சுற்றறிக்கையும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஏற்கனவே அனுப்பப்பட்டு இருந்தது.
நகராட்சி ஆணையர் ஆய்வு
இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பத்தில் உள்ள அரசு மதுபான டாஸ்மாக் கடையில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சி.வி.ரவிச்சந்திரன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் வழங்க வேண்டுமென ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்த சுற்றறிக்கையை கடையின் முகப்புப்பகுதியில் வைக்காமல் இருந்ததை கண்ட அவர் பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியரை கண்டித்தார். மேலும், பொதுமக்கள் பார்வையில் படும்படி அந்த சுற்றறிக்கையை தானே எடுத்து வைத்தார்.
கடும் நடவடிக்கை
மேலும் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் வினியோகிக்க வேண்டும் என்ற விதிமுறையை பின்பற்றுகிறீர்களா? என ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சி.வி.ரவிச்சந்திரன் எச்சரித்தார். இந்த ஆய்வின் போது, நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், மருத்துவர் வீணா மற்றும் நகராட்சி பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story