கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநில மாநாடு கடலூரில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


கும்பகோணத்தில்  தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநில மாநாடு கடலூரில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 12 Dec 2021 10:06 PM IST (Updated: 12 Dec 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநில மாநாட்டை நடத்துவது என்று கடலூரில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூர், 

மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நீலா, மாநில பொருளாளர் பாத்திமாமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில பொதுச்செயலாளர் அனுசுயா வரவேற்றார்.
கூட்டத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ராமதாஸ், சுகாதார செவிலியர் சங்கம் முன்னாள் நிர்வாகிகள் சர்புனிசா, ஜோதி, முத்தமிழ்ச்செல்வி, ஆண்டாள், வள்ளி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மாநில மாநாடு

கூட்டத்தில் கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, தென்காசி உள்பட மாநிலம் முழுவதில் இருந்தும் சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 6-ந்தேதி கும்ப கோணத்தில் சங்கத்தின் 6-வது மாநில மாநாட்டை நடத்துவது, நகர சுகாதார மையங்களில் பல ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் மகப்பேறு உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாநில தலைவர் இந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பதவி உயர்வு

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்களை முன் களப்பணியாளர்களாக அறிவித்ததற்கும், வெளிப்படைத்தன்மையுடன் செவிலியர்களுக்கான கலந்தாய்வு நடத்தியதற்கும் தமிழக முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம். செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு நிலுவையில் உள்ளது. இதை உடனே நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. ஆனால் இதை சீர்குலைக்கும் வகையில் துணை சுகாதார நிலையங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்களை நியமிக்கக்கூடாது. மாநிலம் முழுவதும் சுமார் 1000 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள துணை சுகாதார நிலையங்களை சீரமைப்பதோடு, மக்கள் வசிக்கும் இடங்களில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

பரிசு பெட்டகம்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் வகையில் அம்மா பரிசு பெட்டகம் ரூ.4 ஆயிரம் மதிப்பில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த பரிசு பெட்டகம் குறைவாக வருவதால், அவற்றை வழங்குவதில் செவிலியர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
ஆகவே பரிசு பெட்டகத்திற்கு பதிலாக ரூ.4 ஆயிரத்தை ரொக்கமாக வழங்க அரசு முன்வர வேண்டும். செவிலியர் களுக்கு இலவச குடியிருப்பு வழங்க வேண்டும். 770 நடமாடும் மருத்துவக்குழு திட்டத்தில் பகுதி சுகாதார செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story