திண்டிவனத்தில் ஏ.டி.எம்.கார்டை மாற்றிக்கொடுத்து தொழிலாளியிடம் ரூ.20 ஆயிரம் அபேஸ்
திண்டிவனத்தில் ஏ.டி.எம்.கார்டை மாற்றிக்கொடுத்து தொழிலாளியிடம் ரூ.20 ஆயிரம் அபேஸ் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த தீவனூர் அருகே உள்ள ரெட்டணை ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் செல்வம்(வயது 35), தொழிலாளியான இவர், திண்டிவனம் நேரு வீதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.மையத்தில் ரூ.20 ஆயிரம் டெபாசிட் செய்வதற்காக வந்தார்.
அப்போது அவருக்கு ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்த தெரியாததால், அருகில் இருந்த 2 வாலிபர்களிடம் பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை கொடுத்து தனது வங்கி கணக்கில் பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார்.
அவற்றை வாங்கிய அந்த வாலிபர்கள், ரூ.20 ஆயிரத்தை செல்வத்தின் வங்கி கணக்கில் செலுத்தினர். பின்னர் அவருடைய ஏ.டி.எம்.கார்டுக்கு பதிலாக வேறொரு ஏ.டி.எம். கார்டை செல்வத்திடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் செல்வத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி அவருடைய செல்போன் எண்ணுக்கு வந்தது. இதையடுத்து ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது, அது வேறொரு கார்டு என்பது தெரியவந்தது. இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
2 பேர் கைது
இந்நிலையில், நேற்று அதிகாலை திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் நேரு வீதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஸ்டேட் வங்கி அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் கள்ளக்குறிச்சி ஹரிப்பா நகரை சேர்ந்த அண்ணாமலை மகன் வசந்த்(21), வெங்கடேஷ் மகன் மகேஸ்வரன்(21) ஆகியோர் என்பதும், இவர்கள் செல்வத்தின் ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து ரூ.20 ஆயிரம் அபேஸ் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து வசந்த், மகேஸ்வரன் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story