முதியவர் கிணற்றில் விழுந்ததாக நினைத்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்


முதியவர் கிணற்றில் விழுந்ததாக நினைத்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Dec 2021 11:19 PM IST (Updated: 12 Dec 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் அருகே முதியவர் கிணற்றில் விழுந்ததாக நினைத்து, மீட்புப்பணிக்கு வருவாய்த்துறையினர் வராததால் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேட்டவலம்

வேட்டவலம் அருகே முதியவர் கிணற்றில் விழுந்ததாக நினைத்து, மீட்புப்பணிக்கு வருவாய்த்துறையினர் வராததால் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குளிக்க சென்ற முதியவர் 

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த வேளானந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட நெய்குப்பம் கிராமத்தில் வசித்தவர் பழனி (வயது 74), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாயக்கிணற்றில் சமீபத்தில் பெய்த மழையால் 100 அடி ஆழத்துக்கு நீர் நிரம்பி உள்ளது. 

நேற்று முன்தினம் பழனி விவசாயக் கிணற்றில் குளிக்கச் செல்வதாக வீட்டில் கூறி விட்டுச் சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. 

அவர், கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம், என நினைத்த குடும்பத்தினர் உடனே வேட்டவலம் தீயணைப்பு நிலையத்துக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

வருவாய்த்துறையினர் வராததால் மறியல்

தகவலை கேள்விப்பட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் பரசுராமன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயக் கிணற்றில் இறங்கி, பழனியை தேடினர். மேலும் மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றும் பணி நடந்தது. 

கீழ்பென்னாத்தூர் தாசில்தார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வராததால் ஆத்திரம் அடைந்த பழனியின் குடும்பத்தினரும், கிராம மக்களும் நேற்று முன்தினம் மாலை திருவண்ணாமலை- விழுப்புரம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீரை வெளியேற்றியும் முதியவரை காணவில்லை
இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் சக்கரை, வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமிபதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

விவசாயக் கிணற்றில் கூடுதலாக மோட்டார்களை பொருத்தி நீரை வெளியேற்றி பழனியை தேடும் பணியை தீவிரப்படுத்தப்படும், எனத் தெரிவிததனர்.

 இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். விவசாயக் கிணற்றில் இருந்த நீரை முற்றிலும் வெளியேற்றி பழனியை தேடியபோது, அவரை விவசாயக் கிணற்றில் காணவில்லை. 

மாயம் என மனைவி புகார்

நேற்று மாலை 6 மணி வரை தேடிப்பார்த்தும் பழனியை காணாததால் தேடும் பணியை தீயணைப்புத்துறையினர் கைவிட்டனர். 

இதையடுத்து பழனியின் மனைவி நவநீதம் தனது கணவரை காணவில்லை, எனக் கொடுத்த புகாரின் பேரில் வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பழனியை தேடி வருகின்றனர்.

Next Story