லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு


லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 12 Dec 2021 6:10 PM GMT (Updated: 12 Dec 2021 6:10 PM GMT)

காஞ்சீபுரம் கோர்ட்டு வளாகத்தில் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

காஞ்சீபுரம்,

நாடு முழுவதும் கோர்ட்டுகளில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து தீர்த்து வைத்து மக்கள் பயன்பெற தேசிய மக்கள் நீதிமன்றம் எனும் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெறும்.

அதன்படி காஞ்சீபுரம் மாவட்டம், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் காஞ்சீபுரத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது காஞ்சீபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 7 கோர்ட்டுகளில் சொத்து, விபத்து காப்பீடு, குடும்ப உறவு பிரச்சினைகள் உள்ளிட்ட பல வருடங்களாக தீர்த்து வைக்கப்படாமல் இருந்த பல்வேறு வழக்குகளை தீர்த்து வைக்கும் வகையில் மக்கள் நீதிமன்றம் செயல்பட்டது.

ரூ.15 கோடிக்கு தீர்வு

அதன்படி, நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகளில் உடனடியாக தீர்வுகள் நீதிபதிகளால் வழங்கப்பட்டது.

அதன்படி ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துப் பிரச்சினைகளும், விபத்து காப்பீடு பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்பட்டதாக மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தெரிவித்தார்.

மேலும் கோர்ட்டுகளில் தீர்வு ஏற்படாமல் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விரைவாக தீர்த்துக்கொள்ள வக்கீல்ளும், பொதுமக்களும் முன்வர வேண்டும் என நீதிபதி வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள் இளங்கோவன், திருஞானசம்பந்தம்,

ராஜேஸ்வரி, சரண்யா செல்வம், செந்தில்குமார், சரவணகுமார், மற்றும் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் கார்த்திகேயன், ஜான், பார்த்தசாரதி, மற்றும் வக்கீல்களும், காப்பீட்டு நிறுவன ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர்

உத்திரமேரூர் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதியுமான வி.பிரேம்குமார் தலைமையில், தேசிய லோக் அதாலத் எனப்படும், மக்கள் நீதிமன்றம், உத்திரமேரூரில் நேற்று நடந்தது.

இதில், சிவில் வழக்கு, கிரிமினல், வங்கி சம்பந்தமான வழக்கு உள்ளிட்ட 477 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 93 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 21 வங்கி வழக்குகளில் ரூ.8 லட்சத்து 67 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

Next Story