இலை கருகல் நோயால் வாழைகள் பாதிப்பு
களக்காடு பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக வாழைகளை இலை கருகல் நோய் தாக்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
களக்காடு:
களக்காடு பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக வாழைகளை இலை கருகல் நோய் தாக்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இலை கருகல் நோய்
களக்காடு பகுதியில் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல், வாழைகள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டும் விவசாயிகள் கடந்த ஜூன் மாதம் வாழைகள் பயிர் செய்தனர். தற்போது நடவு செய்யப்பட்டு 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாழைகளை இலை கருகல் நோய் (பழுப்பு நோய்) தாக்கி வருகிறது.
இந்த நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள் நிறமாகி, பின்னர் கருகி விடுகிறது. இதனால் வாழைகள் முழுவதுமாக சேதமடைகிறது. இலை கருகல் நோயினால் வாழைத்தார்கள் திரட்சியாக இருக்காது என்றும் மகசூல் பாதிக்கும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயிகள் கவலை
களக்காடு மூங்கிலடி, சிதம்பரபுரம், கலுங்கடி, கருப்பந்தோப்பு, மேலப்பத்தை, அம்பேத்கர் நகர், சிவபுரம், கள்ளியாறு, மஞ்சுவிளை, கீழப்பத்தை, கருவேலங்குளம், பத்மநேரி, வடகரை, தம்பிதோப்பு, எஸ்.என்.பள்ளிவாசல், சாலைப்புதூர், மற்றும் சுற்றுபுறப் பகுதிகளிலும் 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள பல லட்சம் வாழைகள் இலை கருகல் நோயால் வாடி, வதங்கி காணப்படுகிறது. மேலும் வாழைக்காய்களிலும் கரும்புள்ளிகள் நிறைந்து காணப்படுகிறது இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தற்போது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பகுதிகளில் தொடர் மழை காணப்படுகிறது. இதனால் வாழையின் ஈரப்பதம் காயாமல் தொடர்ந்து நீடிப்பதால் இந்த நோய் தாக்குவதாக கூறப்படுகிறது.
ஆதார விலை
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் முருகன் கூறுகையில், “எப்போதும் இல்லாத அளவிற்கு இலை கருகல் நோய் பரவி வருகிறது. ஒட்டு மொத்தமாக நோய் தாக்குதலால் வாழைத்தார் விளைச்சல் கடுமையாக பாதிக்கும் என்பதால் மாவட்ட வேளாண்மை துறையினர் நடவடிக்கை எடுத்து களக்காடு பகுதியில் ஆய்வு செய்து இலை கருகல் நோய் எதனால் பரவுகிறது என்பதை கண்டறிந்து அதற்கான மருந்துகளையும் பரிந்துரைக்க வேண்டும். மேலும் நெல்லுக்கு இருப்பதை போல் வாழைகளுக்கும் ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story