சித்தராமையாவுடன் சி.எம்.இப்ராகிம் எம்.எல்.சி. திடீர் சந்திப்பு
ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர திட்டமிட்டு இருந்த நிலையில் சித்தராமையாவை சி.எம்.இப்ராகிம் எம்.எல்.சி. நேரில் சந்தித்து பேசினார். தனக்கு மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:
காங்கிரசில் கடும் போட்டி
கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் காங்கிரசை சேர்ந்த எஸ்.ஆர்.பட்டீல் எம்.எல்.சி., அவரது பதவி காலம் முடிவடைகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மேல்-சபை தேர்தலில் போட்டியிட அவருக்கு மீண்டும் காங்கிரஸ் வாய்ப்பு வழங்கவில்லை. அதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவி அவரிடம் இருந்து பறிபோகிறது. இந்த நிலையில் அந்த எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு காங்கிரசில் கடும் போட்டி எழுந்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அல்லம் வீரபத்ரப்பா, சி.எம்.இப்ராகிம் உள்ளிட்டோர் அந்த பதவியை எதிர்நோக்கி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் 2 பேரும் தனித்தனியாக நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, தங்களின் அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.
எத்தனையோ பிரச்சினைகள்
இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த சி.எம்.இப்ராகிம், "நான் சித்தராமையாவை நேரில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினேன். கர்நாடக அரசு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருவது சரியல்ல. கட்டாய மதமாற்றத்தை நாங்களும் எதிர்க்கிறோம். ஆனால் ஒருவர் தாமாக முன்வந்து சுய விருப்பத்தின் பேரில் மதம் மாறினால் அதை யாரும் தடுக்க முடியாது. நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. அதை எல்லாம் விட்டுவிட்டு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருவதில் இந்த அரசு ஆர்வம் காட்டுகிறது" என்றார்.
சி.எம்.இப்ராகிம், காங்கிரஸ் தன்னை ஓரங்கட்டுவதாக கூறி ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேரப்போவதாக கூறியிருந்தார். அவரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனாலும் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கினால் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக மாட்டேன் என்று கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது.
Related Tags :
Next Story