கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்


கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 13 Dec 2021 1:01 AM IST (Updated: 13 Dec 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பெங்களூரு:

சட்டசபை நடக்கவில்லை

  கர்நாடக சட்டசபை ஆண்டுக்கு 4 முறை கூடுகிறது. அதாவது ஜனவரியில் கவர்னரை உரைக்காக சட்டசபயின் கூட்டு கூட்டம், மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர், ஜூலை மாதத்தில் மழைக்கால கூட்டத்தொடர், டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இந்த குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் உள்ள சுவர்ன சவுதாவில் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக பெலகாவியில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு அங்கு சட்டசபை கூட்டம் நடக்கவில்லை.

  கர்நாடகத்தில் சிந்தகி, ஹனகல் ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்-மந்திரியின் சொந்த மாவட்டத்தில் இருக்கும் ஹனகல் தொகுதியில் ஆளும் பா.ஜனதா தோல்வி அடைந்தது. இது அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கர்நாடக அரசு திட்ட ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் 40 சதவீத கமிஷனர் கேட்பதாக கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். இந்த கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது மாநில அரசுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது.

முதல்-மந்திரி ஆவார்

  பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் பா.ஜனதா அரசு மீது காங்கிரஸ் தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினர். இதில் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்களால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நீக்கப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி விரைவில் முதல்-மந்திரி ஆவார் என்று பகிரங்கமாக பொதுக்கூட்டத்தில் பேசினார். ஈசுவரப்பாவின் இந்த பேச்சு கர்நாடகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

  இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அங்குள்ள சுவர்ண சவுதாவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் பிட்காயின் முறைகேடு, 40 சதவீத கமிஷன் புகார், விவசாய சட்ட திருத்தங்கள் உள்ளிட்ட விஷயங்களை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் சட்டசபையில் புயல் கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூடான விவாதங்கள்

  எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு சரியான பதிலடி கொடுக்க மந்திரிரிகளும் தயாராகியுள்ளனர். மொத்தத்தில் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து சூடான விவாதங்கள் நடைபெற உள்ளது. உள்ளே எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பும் நிலையில் சுவர்ண சவுதாவுக்கு வெளியே விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினல் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி அதன் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

  பெலகாவி சுவர்ண சவுதாவை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டசபை கூட்டத்தில் 2 டோஸ் தடுப்பூசியுடன் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மற்றும் பரிசோதனை செய்து கொள்ளாதவர்கள் அங்கு வந்தால், அதே இடத்தில் தடுப்பூசி போடவும், பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தலைமை செயலகம் பெலகாவிக்கு மாற்றம்

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் பெலகாவியில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக தலைமை செயலகம் அதாவது விதான சவுதா பெலகாவிக்கு மாற்றப்பட்டுள்ளது. அனைத்து துறைகளின் கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், இயக்குனர்கள், கமிஷனர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் பெலகாவிக்கு சென்றுள்ளனர். 

அடுத்த 10 நாட்களுக்கு பெலகாவியில் இருந்து ஆட்சி நிர்வாகம் நடத்தப்பட உள்ளது. இதற்கு தேவையான எந்திர உபகரணங்கள், வேண்டிய உதவியாளர்கள், 2-ம் நிலை அதிகாரிகளும் பெலகாவிக்கு சென்றுள்ளனர்.


பெலகாவியில் சட்டசபையை நடத்துவது ஏன்?

கர்நாடகம்-மராட்டியம் எல்லையில் பெலகாவி அமைந்துள்ளது. பெலகாவி, கர்நாடகத்தின் ஒரு அங்கம். ஆனால் பெலகாவியை மராட்டிய மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இது கர்நாடகத்திற்கு சேர்ந்த பகுதி என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஏற்கனவே குழு கூறிவிட்டது. ஆனாலும் இந்த பிரச்சினையை மராட்டிய மாநிலம் விடாமல் தொடர்ந்து வருகிறது. பெலகாவியில் உள்ள மராட்டிய அமைப்புகள், கர்நாடகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. மராட்டிய மாநிலம் மற்றும் மராட்டிய அமைப்புகளின் இத்தகைய செயல்பாடுகள், கர்நாடகத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. 

அதனால் மராட்டிய மாநிலத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 14 ஆண்டுகளாக பெலகாவியில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெலகாவி கர்நாடகத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மராட்டிய மாநிலத்திற்கு கர்நாடகம் உரக்க சொல்கிறது. சட்டசபை கூட்டத்தை நடத்துவதற்கு என்றே விதான சவுதாவை தழுவி சுமார் ரூ.500 கோடி கோடிவில் சுவர்ண சவுதா கட்டப்பட்டுள்ளது. இது முன்பு எடியூரப்பா 2008-13-ம் ஆண்டு எடியூரப்பா முதல்-மந்திரி இருந்தபோது கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மதமாற்ற தடுப்பு தனிநபர் மசோதா

கர்நாடக சட்டசபையில் மதமாற்ற தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த மசோதாவை அரசு கொண்டு வருவது இல்லை. அதற்கு பதிலாக பா.ஜனதாவை சேர்ந்த துளசி முனிராஜ்கவுடா, மதமாற்றத்தை தடுக்கும் நோக்கத்தில் எம்.எல்.சி., மேல்-சபையில் தனிநபர் மசோதாவை கொண்டுவர முடிவு செய்துள்ளார். அந்த மசோதாவை அரசு ஏற்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு அரசு அதை ஏற்கும் பட்சத்தில், அந்த மசோதாவை 2 சபையிலும் நிறைவேற்ற பா.ஜனதா முயற்சி செய்யும் என்று சொல்லப்படுகிறது. 

ஏனென்றால் ஆளும் பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி உள்ளதால், அந்த மசோதா எளிதாக நிறைவேற்றப்படும். அது பிறகு கவர்னரின் ஒப்புதலுடன் சட்ட வடிவத்தை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மதமாற்ற தடை சட்டத்திற்கு காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் கர்நாடகத்தில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகள் தீவிரமாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

பிரமுகர்கள் தங்க 2,000 அறைகள் ஒதுக்கீடு

பெலகாவியில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என முக்கிய பிரமுகர்கள் தங்க தங்கும் விடுதிகளில் 2 ஆயிரம் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் தங்க ஒரு மினி நகரமே உருவாக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக பெரிய கூடாரம் ஒன்று போடப்பட்டு, அதில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு குளியல் அறை, கழிவறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தொடரின்போது, சில எம்.எல்.ஏ.க்கள் உப்பள்ளியில் தங்கி சட்டசபைக்கு தினமும் போய் வந்தனர். 

ஆனால் இந்த முறை அனைவருக்கும் பெலகாவியிலேயே தங்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எம்.எல்.ஏ.க்களுக்கு பயணப்படி வழங்குவது மிச்சமாகும். மந்திரிகள் உள்பட சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அரசு சார்பிலேயே உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Next Story