தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
குரங்குகள் தொல்லை
தஞ்சை மாவட்டம் மாத்தூர் மேற்கு ஊராட்சி பகுதியில் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இவை அந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை, வாழை, கடலை உள்ளிட்டவற்றை சேதப்படுத்துகிறது. மேலும், குடியிருப்புகளுக்குள் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி செல்கின்றன. அதுமட்டுமின்றி சாலையில் வாகனங்களில் செல்பவர்கள், பெண்கள், குழந்தைகளை துரத்தி சென்று கடித்து விடுகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ம5ாத்தூர் ஊராட்சி பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-கபில், மாத்தூர் மேற்கு.
சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த வலையபேட்டை அக்கிரஹாரம் வி.ஐ.பி.நகரில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீரில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மேற்கண்ட பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? -பொதுமக்கள், கும்பகோணம்.
தொற்று நோய்கள் பரவும் அபாயம்
தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு அருகில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், தஞ்சை.
Related Tags :
Next Story