கூட்டுறவு வங்கி கூட்டத்தில் அதிகாரிகளுடன் தி.மு.க.வினர் வாக்குவாதம்
ஆண்டறிக்கை புத்தகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. படம் அச்சிடப்படாததால் எதிர்ப்பு தெரிவித்து நிக்கல்சன் கூட்டுறவு வங்கி கூட்டத்தில் அதிகாரிகளுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
ஆண்டறிக்கை புத்தகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. படம் அச்சிடப்படாததால் எதிர்ப்பு தெரிவித்து நிக்கல்சன் கூட்டுறவு வங்கி கூட்டத்தில் அதிகாரிகளுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேரவை கூட்டம்
தஞ்சை வடக்குவீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கியின் பேரவை கூட்டம் நேற்றுகாலை தொடங்கியது. கூட்டத்துக்கு வங்கி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், விருத்தாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாண்மை இயக்குனர் அன்புச்செல்வி 2022-23-ம் ஆண்டுக்கான வங்கியின் செயல்திட்டம் குறித்து பேசினார்.
பொதுமேலாளர் ரவிச்சந்திரன் வரவு-செலவு கணக்கு விவரங்களை வாசித்தார். தொடர்ந்து நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி தலைவர் சரவணன் பேசுவதற்காக எழுந்து நின்றார். அப்போது, மாநகர தி.மு.க. துணைச் செயலாளர் நீலகண்டன் தலைமையில் தி.மு.க.வினர் 8 பேர் அரங்கத்துக்குள் நுழைந்து வங்கி தலைவரை பேச விடாமல் தடுத்தனர்.
கேள்வி எழுப்பிய தி.மு.க.வினர்
பின்னர் அவர்கள், இதற்கு முன்பு வெளியிடப்பட்ட ஆண்டறிக்கை புத்தகத்தில் எம்.பி.யாக இருந்த வைத்திலிங்கம், அமைச்சராக இருந்த துரைக்கண்ணு ஆகியோர் புகைப்படம் இடம் பெற்று இருந்தது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சி நடக்கும் நிலையில் இந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கை புத்தகத்தில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. ஆகியோர் புகைப்படம் ஏன்? அச்சிடப்படவில்லை என கேள்வி எழுப்பினர்.
அப்போது தலைவர் சரவணன், தமிழகஅரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றி யாருடைய புகைப்படங்கள் இடம் பெற வேண்டும் என்பதை முடிவு செய்து புத்தகத்தை அச்சிட்டு கொள்ளுங்கள் என கூறிவிட்டோம். இவர்கள் படங்கள் தான் இடம் பெற வேண்டும் என நிர்வாகக்குழு தரப்பில் இருந்து எதுவும் சொல்லவில்லை. எந்த பிரச்சினை என்றாலும் இருக்கையில் அமர்ந்து கூறுங்கள். பதில் சொல்ல தயாராக இருக்கிறோம் என்றார்.
வாக்குவாதம்
இதை கேட்ட தி.மு.க.வினர், நாங்கள் நிர்வாகக்குழு விளக்கத்தை கேட்கவில்லை. அதிகாரிகளிடம் தான் கேள்வி கேட்கிறோம் என கூறியதுடன் கூட்டத்தை நடத்தக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே மேலாண்மை இயக்குனர் அன்புச்செல்வி எழுந்து, மேடையில் நின்றபடி தற்போது நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனிமேல் தமிழக அரசின் கொறடா, எம்.பி., எம்.எல்.ஏ., புகைப்படத்தையும் அச்சிடுவோம் என்றார்.
இதை ஏற்காத தி.மு.க.வினர் முதலில் கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு புகைப்படங்களுடன் ஆண்டறிக்கை புத்தகத்தை அச்சிட்டபிறகு மற்றொரு தேதியில் கூட்டத்தை நடத்த வேண்டும் என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து கூட்டத்தை நடத்தினால் ஏற்படும் சட்டம் -ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பு கிடையாது என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
மாற்றி அமைக்கப்படும்
பின்னர் தலைவர் சரவணன் பேசும்போது, ஆண்டறிக்கை புத்தகம் மாற்றி அமைக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்படும். ஏற்கனவே புத்தகத்தில் கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பெரியசாமி படம் இடம் பெற்று உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ. புகைப்படம் இடம்பெறாதது எதிர்பாராமல் நடந்தது. இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார்.
இதை ஏற்றுக்கொள்ளாத தி.மு.க.வினர், பொதுமேலாளர் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர். இதைத்தொடர்ந்து பேசிய பொதுமேலாளர் ரவிச்சந்திரன், நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனிமேல் தவறு நடக்காது என்றார். இதையடுத்து கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கூறிவிட்டு தி.மு.க.வினர் புறப்பட்டனர்.
தேசிய கீதம்
தொடர்ந்து தலைவர் சரவணன், இந்த நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி சிறப்பாக பணியை மேற்கொள்ளும் என பேசினார். அப்போது தி.மு.க.வினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சில நிமிடங்கள் பேசிய சரவணன், தேசிய கீதம் பாடப்படும் என்றார்.
கூட்டத்தை ஒத்தி வைக்க சொல்கிறோம். நீங்கள் எப்படி நடத்தலாம் என தி.மு.க.வினர் கூறியபோது தேசியகீதம் இசைக்கப்பட்டது. இதனால் அனைவரும் அமைதியாக நின்றனர். தேசியகீதம் முடிந்தவுடன் அனைவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
Related Tags :
Next Story