‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின்வாரியத்தின் விறுவிறு நடவடிக்கை
சென்னை கொளத்தூர் சிலந்திக்குட்டை மோகனம் தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டியில் ஆபத்தான வகையில் மின்சார வயர்கள் வெளியே நீட்டிக் கொண்டிருப்பது பற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து மின்சார வயர்கள் மின்சார பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் விறுவிறுப்பு நடவடிக்கைக்கும், ‘தினத்தந்தி’க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
துருபிடித்த மின்விளக்கு கம்பம் மாற்றம்
சென்னை புழல் லட்சுமி அம்மன் கோவில் மெயின் தெருவில் உள்ள மின்விளக்கு கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்த மின்விளக்கு கம்பம் மாற்றப்பட்டுள்ளது.
கழிவுநீரால் மக்கள் அவதி
சென்னை அயப்பாக்கம் ஐ.சி.காலனி மின்சார அலுவலகம் பின்புறம் உள்ள ஜீவரத்தினம் தெருவில் கழிவுநீர் தெப்பம் போன்று தேங்கி உள்ளது. வீடுகளுக்கு உள்ளேயும் வந்து விடுகிறது. இதனால் சொல்லொணத் துயரத்தை அன்றாடம் அனுபவித்து வருகிறோம். எங்களுடைய இன்னல்களை உணர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.முத்தமிழ்செல்வி, அயப்பாக்கம்.
திறந்திருக்கும் மின் இணைப்பு பெட்டி
சென்னை திருவான்மியூர் இந்திரா நகர் 29-வது குறுக்கு தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் இருக்கிறது. மேலும் மின்வயர்கள் முறையற்ற வகையில் செல்கிறது. இதன் காரணமாக மின் விபத்துகள் நேரிட்டு விடுமோ? என்ற தயக்கம் இருக்கிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விஜய், இந்திரா நகர்.
சாலையை ஆக்கிரமித்துள்ள மின்சார வயர்
சென்னை எருக்கஞ்சேரி அம்பேத்கர் சாலை அம்பேத்கர் தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டியில் இருந்து ராட்சத மின்வயர்கள் சாலையை ஆக்கிரமித்து செல்கிறது. இந்த மின்வயர் காலில் சிக்கினால் கீழே தடுமாறி விழும் நிலை இருக்கிறது. எனவே மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சமூக ஆர்வலர்.
குப்பை குவியலும்.., சுகாதார சீர்கேடும்..,
சென்னை வானகரம் பழைய மீன் மார்க்கெட் சாலை செட்டியார் அகரம் சாலை கவரை தெருவில் குப்பைத் தொட்டியில் இருந்து முறையாக குப்பை கழிவுகள் அகற்றப்படுவது இல்லை. குப்பை தொட்டி நிரம்பி வழிவதால் பொதுமக்கள் சாலையிலேயே குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். இரை தேடி வரும் கால்நடைகள் குப்பைகளை தூர்வாருகின்றன. இதனால் இந்த சாலை மிகுந்த சுகாதார சீர்கேடுடன் காட்சி அளிக்கிறது.
- பொதுமக்கள்.
ரேஷன் கடை முன்பு சேறு-சகதி
சென்னை பட்டாளம் மணிகூண்டு ஸ்ட்ரான்ஸ் சாலை முதல் தெருவில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் முன்பு சேறும், சகதியும் சூழ்ந்துள்ளது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க வரும் ஏழை-எளிய மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சேற்றில் வழுக்கி சிலர் கீழே விழுந்துள்ளனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
- சையது கஷிம், பட்டாளம்.
மின்கம்பம் சேதம்
சென்னை அம்பத்தூர் பானுநகர் 16-வது அவென்யூவில் உள்ள மின்கம்பத்தின் அடிபகுதி சேதம் அடைந்து காணப்படுகிறது. சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் மட்டும் தெரிகின்றன. எனவே இந்த மின்கம்பத்தின் உறுதித்தன்மையை ஆராய்ந்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காமராஜ், அம்பத்தூர்.
குப்பைத் தொட்டி மாற்றப்படுமா?
சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் ஆஸ்பத்திரி எதிரே குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியை ஒட்டி ‘டாஸ்மாக்’ மதுபான கடையும் இயங்கி வருகிறது. போதை ஆசாமிகள் குப்பைத்தொட்டி அருகே சிறுநீர் கழிக்கிறார்கள். இதனால் இப்பகுதி சுகாதார சீர்கேடாக காட்சி அளிக்கிறது.
- மாரியப்பன், திருவொற்றியூர்.
மின்சார டிரான்ஸ்பார்மரை மாற்ற கோரிக்கை
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா திம்மையான் பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கருக்குப்பேட்டை பஸ் நிலையம் எதிரே சாலை வளைவில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. வாகனங்கள் வளையும் இடத்தில் இருப்பதால், அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து விடுமோ? என்ற அச்சம் மேலோங்கி இருக்கிறது. எனவே இந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மாற்றப்படுமா?
- வாகன ஓட்டிகள்.
கழிவுநீர் அடைப்பு பிரச்சினை
சென்னை ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகர் வி.வி.காலனி 2-வது தெருவில் கழிவுநீர் அடைப்பு பிரச்சினை ஒரு மாதமாக இருக்கிறது. இதுகுறித்து பலமுறை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் புகார் அளித்தும் பலன் இல்லை. இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கழிவுநீர் பிரச்சினையால் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி உள்ளோம்.
- பொதுமக்கள்.
திறந்தவெளி கழிப்பிடமான சுடுகாடு
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கொடிவலசை காலனியில் உள்ள சுடுகாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. திறந்தவெளி கழிப்பிடம் போன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் நிம்மதியாக உறங்கும் இடம் இப்படி அசுத்தமாக இருப்பது மிகுந்த மனவேதனையையும், மன உளைச்சலையும் அளிக்கிறது. எனவே இந்த சுடுகாட்டை அசுத்தத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.
-கே.எம்.ராமச்சந்திரன், திருத்தணி.
Related Tags :
Next Story