புழல் சிறையில் கைதி மர்ம சாவு; ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மறுபிரேத பரிசோதனை


புழல் சிறையில் கைதி மர்ம சாவு; ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மறுபிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 13 Dec 2021 3:20 PM IST (Updated: 13 Dec 2021 3:20 PM IST)
t-max-icont-min-icon

மாஜிஸ்திரேட்டு மேற்பார்வையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கைதி சீனிவாசனின் உடலை டாக்டர்கள் மறுபிரேத பரிசோதனை நடத்தினர்.

சென்னை ஓட்டேரி கிறிஸ்துதாஸ் சாலையை சேர்ந்தவர் சீனிவாசன் என்ற அறுப்பு சீனிவாசன் (வயது 42). இவர், வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 8-ந் தேதி சீனிவாசனை அவருடைய மனைவி ஜான்சிராணி, புழல் சிறையில் சென்று பார்த்து வந்தார். அவர் பார்த்துவிட்டு சென்றபிறகு, சீனிவாசனுக்கு திடீர் உடலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக ஜான்சிராணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சீனிவாசன் இறந்துபோனார். அங்கு வந்த ஜான்சிராணியிடம், சீனிவாசன் இறந்துவிட்டதால் அவரது உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜான்சிராணி, தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, விடுப்பில் ராஜஸ்தான் மாநிலம் சென்றுவிட்டார். இது அவசர வழக்கு என்பதால் அவரது உத்தரவின்பேரில் நீதிபதி தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தினார். மனுதாரர் கூறும் டாக்டர் முன்னிலையில் கைதி சீனிவாசனின் உடல் மறுபிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று மாலை மாதவரம் மாஜிஸ்திரேட்டு ஜெய்சங்கர் மேற்பார்வையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கைதி சீனிவாசனின் உடலை டாக்டர்கள் மறுபிரேத பரிசோதனை நடத்தினர். அதன் அறிக்கை வந்த பிறகே சீனிவாசன் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story