மூவரசம்பட்டு ஏரியை சீரமைக்க எடுத்த நடவடிக்கை என்ன? பசுமை தீர்ப்பாயம் கேள்வி
சென்னையை அடுத்த மூவரசம்பட்டு ஏரி முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற புகாரை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.
பின்னர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய செயற்பொறியாளர் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்து, ஏரியின் தற்போதைய நிலை, அதை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
மேலும், மூவரசம்பட்டு ஏரியின் நீர் வரத்து கால்வாய் மற்றும் போக்கு கால்வாய், ஆதம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேறி மூவரசம்பட்டு ஏரிக்கு வரும் கால்வாய் ஆகியவற்றின் வழிகளை கண்டுபிடித்து, அவற்றை சீரமைத்து, அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆய்வறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 17-ந் தேதிக்கு தள்ளி வைப்பதாகவும், அதற்குள் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
Related Tags :
Next Story