திருவள்ளூர் அருகே பஸ்கள் நேருக்கு-நேர் மோதல்; 26 பேர் படுகாயம்
திருவள்ளூர் அருகே இருவேறு இடங்களில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் உள்பட 26 பேர் படுகாயமடைந்தனர்.
பஸ்கள் மோதல்
திருவள்ளூரில் இருந்து நேற்று காலை செங்கல்பட்டு நோக்கி வந்த அரசு பஸ், போளிவாக்கம் பகுதியில் உள்ள தரைப்பாலம் அருகே வந்தபோது எதிரே ஸ்ரீபெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் 2 பஸ்களின் முன்பகுதியும் நொறுங்கியது. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவரான உத்திரமேரூரைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 43) மற்றும் அதில் இருந்த பயணிகள் என 12 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மற்றொரு விபத்து
அதேபோல திருவள்ளூரில் இருந்து தனியார் பஸ் ஒன்று நேற்று ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. போளிவாக்கம் சத்திரம் அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு தனியார் பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் 2 பஸ்களில் இருந்த 9 பெண்கள், 5 ஆண்கள் என 14 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 பஸ்களின் முன்பகுதியும் சேதமடைந்தன.
இருவேறு இடங்களில் நடந்த இந்த சாலை விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த 2 விபத்துகள் தொடர்பாக மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story