ஆர்.கே.பேட்டையில் சுடுகாட்டிற்கு இடம் கேட்டு பிணத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்


ஆர்.கே.பேட்டையில் சுடுகாட்டிற்கு இடம் கேட்டு பிணத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Dec 2021 6:29 PM IST (Updated: 13 Dec 2021 6:29 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.பேட்டையில் சுடுகாட்டிற்கு இடம் கேட்டு பிணத்துடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுடுகாட்டுக்கு இடம்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், மைலர் வாடா ஊராட்சியை சேர்ந்த வீரப்ப ரெட்டி கண்டிகையில் சுடுகாட்டு பகுதிக்கு இடம் வேண்டும் என 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதி மக்கள் போராடி வருகிறார்கள்.

ஆனால் இதுநாள் வரை இவர்களுக்கு சுடுகாட்டு பகுதிக்கு இடம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் இறந்தவர்களின் பிணத்தை அங்குள்ள ஓடையில் புதைத்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது ஓடையில் மழை காரணமாக தண்ணீர் ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவி அம்மாள் (வயது 82) என்பவர் வயது முதிர்வு காரணமாக இறந்து போனார்.

சாலை மறியல்

இவரது பிணத்தை எடுத்து கொண்டு ஆர்.கே.பேட்டை தாலுகா அலுவலகத்தின் முன்பு மாநில நெடுஞ்சாலையில் வைத்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

அப்போது தங்களது கிராமத்திற்கு சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். தகவல் கிடைத்ததும் ஆர்.கே. பேட்டை தாசில்தார் மணிவாசகம் மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் சாலை மறியல் செய்த பொதுமக்களை சமாதானம் செய்தனர். சுடுகாட்டிற்கு இடத்தை விரைவில் தேர்வு செய்யப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story