ஏரல் அருகே விபத்தில் போலீஸ்காரர் பலியானார்


ஏரல் அருகே விபத்தில் போலீஸ்காரர் பலியானார்
x
தினத்தந்தி 13 Dec 2021 6:35 PM IST (Updated: 13 Dec 2021 6:35 PM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே அண்ணன் திருமணத்திற்கு பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பியபோது டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்

ஏரல்:
ஏரல் அருகே அண்ணன் திருமணத்திற்கு பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பியபோது டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
போலீஸ்காரர்
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆவரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசாமி மகன் மகாசந்தர் (வயது 26). இவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் 5-வது படைப்பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இவரது அண்ணனுக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக கடந்த 11-ந் தேதி முதல் மகாசந்தர் விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார். நேற்று முன்தினம் திருமணத்திற்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்குவதற்காக மகாசந்தர், தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சிவபெருமாளுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடிக்கு சென்றார். பொருட்களை வாங்கிவிட்டு இரவில் 2 பேரும் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை மகாசந்தர் ஓட்டினார்.
பரிதாப சாவு
ஏரல் அருகே உள்ள பழையகாயல் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டு இருந்தது. அப்போது, முன்னால் ஒரு டிராக்டர் விறகு ஏற்றிக் கொண்டு சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் டிராக்டரில் நீட்டிக் கொண்டு இருந்த விறகுகள் மகாசந்தர் உடலில் குத்தியது. இந்த விபத்தில் மகாசந்தர், சிவபெருமாள் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.
இதுகுறித்து உடனடியாக ஏரல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ேமரி ஜெமிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மகாசந்தரை பரிேசாதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிவபெருமாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டிராக்டர் டிரைவர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் விசாரணை நடத்தி, டிராக்டரை ஓட்டி வந்த முக்காணி ரவுண்டானா சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த குருராஜா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மேலும் பலியான மகாசந்தர் உடல் அவரது சொந்த ஊரான ஆவரையூரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
ஏரல் அருகே அண்ணன் திருமணத்திற்கு பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பிய போலீஸ்காரர் விபத்தில் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story