மின் இணைப்பு வழங்கக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
மின் இணைப்பு வழங்கக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
திருப்பூர்,
பெருந்தொழுவு பகுதியில் மின் இணைப்பு வழங்கக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். வழக்கமாக நடக்கும் கூட்ட அரங்கில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதால் அறை எண்.120-ல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
திருப்பூர் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் பெருந்தொழுவு கவுண்டம்பாளையத்தில் நிலம் வாங்கியுள்ளனர். அங்கு வீடு கட்டி குடியேற மின் இணைப்பு பெற முடியாததால் ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதுவரை மின்இணைப்பு பெற முடியாததால் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மின் இணைப்பு
பின்னர் அவர்கள் அளித்த மனுவில், நிலம் வாங்கிய இடத்தில் 2 வீடுகள் கட்டியுள்ளனர். நாங்கள் வீடு கட்டி குடியேற மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் மின்கம்பங்களை சொந்த இடத்தில் நடுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அதன்பிறகு பல்வேறு கட்ட போராட்டத்துக்கு பிறகு மின் கம்பங்கள் நடப்பட்டது. சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் மின்கம்பம் நடுவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பம் நடமுடியாத நிலை ஏற்பட்டது. எங்களுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பல்லடம் பருவாய் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் தனியார் ஒருவர் 3.70 ஏக்கர் பரப்பளவுள்ள தனது நிலத்தை வீடில்லாத ஆதிதிராவிட மக்களுக்கு இலவசமாக கொடுத்தார். 60 குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீடுகட்டி குடியிருந்து வருகிறோம். இதுவரை நாங்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை வழித்தடமாக பயன்படுத்தி வந்தோம். தனியார் ஒருவர் கம்பி வேலி போட்டு வழித்தடத்தை மறைத்து விட்டார். எங்களுக்கு பொதுவழித்தடம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இலவச வீட்டுமனைப்பட்டா
அவினாசியை அடுத்த சேவூர் பாலியக்காட்டுபுதூர் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், நாங்கள் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள். கூலி வேலை செய்து வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த ஞானாம்பாள் அளித்த மனுவில், முத்தனம்பாளையத்தில் எனக்கு சொந்தமான இடத்தை பணத்தேவைக்காக சுப்பையன் என்பவரிடம் கொடுத்து ரூ.70 ஆயிரம் கடந்த 2008-ம் ஆண்டு கடனாக பெற்றேன். அப்போது பவர் எழுதிக்கொடுத்தேன். அதன்பிறகு பணத்தை கொடுத்த பின்னரும் பவர் பத்திரத்தை ரத்து செய்யாமல் இருந்தனர். சுப்பையன் இறந்த பிறகு அவர்களின் வாரிசுகளும் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மின் மாயனத்துக்கு எதிர்ப்பு
திருப்பூர் அனுப்பர்பாளையம் தண்ணீர்பந்தல்காலனியை சேர்ந்த பச்சைமுத்து (வயது 49) என்ற பனியன் தொழிலாளி கண்ணீர் மல்க அளித்த மனுவில், எனது மனைவி மாது (43) கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி பாண்டியன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது திடீரென்று இறந்து விட்டார். மனைவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது. திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடலை ஒப்படைத்தனர். மனைவியின் இறப்புக்கான காரணம் குறித்த அறிக்கையை இதுவரை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்கள். இதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். கருப்பவுண்டம்பாளையம் மயானத்தில் மின் மயானம் அமைப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த வாரம் மண் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். எங்கள் பகுதியில் மின் மயானம் அமைக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தோம். குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், வழிபாட்டு தலம் உள்ளதால் அதற்கு அருகில் மின் மயான பணியை தொடங்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதுபோல் அப்பகுதியில் குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி, தெருவிளக்கு வசதி வேண்டியும் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story