பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்


பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 13 Dec 2021 9:20 PM IST (Updated: 13 Dec 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்

கூடலூர்

கூடலூர் அருகே பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து அட்டகாசம் செய்த காட்டு யானைகள் நெற்கதிர்களையும் மிதித்து நாசப்படுத்தியது.  

காட்டு யானை அட்டகாசம் 

கூடலூர் அருகே உள்ள ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகள் மற்றும் தேவர்சோலை பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீ மதுரை ஊராட்சி மண்வயல் அருகே நியூலேன்ட் பகுதியில் காட்டு யானை புகுந்தது. 

தொடர்ந்து அதே பகுதியில் இருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை முற்றுகையிட்ட அந்த யானை பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து வளாகத்துக்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்த சத்துணவு அறையை உடைத்து அங்கு இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை வெளியே எடுத்து தின்றதுடன், கீழே போட்டும் நாசப்படுத்தியது. 

நெற்கதிர்களை நாசப்படுத்தியது 

பின்னர் அங்கிருந்து குன்டித்தாள் என்ற கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானை வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்களை மிதித்து நாசம் செய்தது. இதில் பல ஏக்கரில் நெற்கதிர்கள் சேதமானது. தொடர்ந்து வடவயல் உள்பட பல கிராமங்களுக்குள் காட்டுயானை புகுந்து அட்டகாசம் செய்தது. 

இதேபோல் கூடலூர் தாலுகா தேவாலா அருகே புஞ்சமூலா பகுதியைச் சேர்ந்த சதீஷ். இவர் தனது குடும்பத்தினருடன் கேரளா சென்று இருந்தார். நேற்றுமுன்தினம் அப்பகுதிக்கு வந்த காட்டுயானை சதீஷ் வீட்டை உடைத்தது. தொடர்ந்து உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தியது. 

பொதுமக்கள் பீதி 

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். கூடலூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். 


Next Story