மீட்பு பணிகளை முடுக்கி விட்ட முதல் அமைச்சருக்கு பாராட்டு


மீட்பு பணிகளை முடுக்கி விட்ட முதல் அமைச்சருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 13 Dec 2021 9:25 PM IST (Updated: 13 Dec 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

மீட்பு பணிகளை முடுக்கி விட்ட முதல் அமைச்சருக்கு பாராட்டு

ஊட்டி

ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டகலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டதுடன், மீட்பு பணிகளை முடுக்கி விட்ட தமிழக முதல்-அமைச்சரை பாராட்டி தென்பிராந்திய தளபதி அருண் பேசினார்.

பாராட்டு விழா

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தின்போது மீட்பு பணிகளில் திறம்பட செயல்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுவிழா எம்.ஆர்.சி. நாகேஷ் பேரக்சில் நடைபெற்றது. 

இதில் தென்பிராந்திய ஜெனரல் லெப்டினன்ட் ஏ.அருண் கலந்துகொண்டு ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பதக்கத்தை மீட்பு பணிகளை துரிதப்படுத்தியதற்காக கலெக்டர் அம்ரித், எம்.ஆர்.சி. கமாண்டர் ராஜேஸ்வர்சிங் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 

அதிகாரிகளுக்கு பதக்கங்கள் 

அதுபோன்று ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பழனிச்சாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, டாக்டர் கார்த்திக் ஆகியோருக்கு பதக்கங்கள் வழங்கப் பட்டன.

தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு உதவி அதிகாரி நாகராஜன், குன்னூர் வனச்சரகர் சசிகுமார், தாசில்தார் தினேஷ், மின்பாதை ஆய்வாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகளையும் அவர் வழங்கினார். அத்துடன் மீட்பு பணிகள் மற்றும் உடல்களை ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு வந்தது, அஞ்சலிக்காக மைதானத்துக்கு எடுத்து சென்ற பணிகளில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப் பட்டன.

முதல்-அமைச்சருக்கு பாராட்டு 

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். எனவே வியாபாரிகள் சங்க தலைவர் உள்பட 2 பேருக்கும் தென்பிராந்திய தளபதி ஏ.அருண் பதக்கம் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:- 

இந்த விபத்து துரதிஷ்டவசமாக நடந்து உள்ளது. விபத்து ஏற்பட்ட 10 நிமிடத்தில் இருந்து அப்பகுதி மக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் துரிதகதியில் மீட்பு பணியில் விரைவாக ஈடுபட்டனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். அத்துடன் அடிக்கடி தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்து கேட்டு உள்ளார். எனவே முதல்-அமைச்சருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழக அரசின் துரித நடவடிக்கையால் மீட்பு பணிகளில் எவ்வித இடையூறும் ஏற்பட வில்லை. நீலகிரி மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு அளித்தனர். எனவே அவர்களுக்கும் நன்றி. 

இவ்வாறு அவர் கூறினார்
விமானிக்கு தீவிர சிகிச்சை 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, மீட்பு பணிகளில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டது. விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அனைத்து பத்திரிக்கையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் கடமை மற்றும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டீர்கள். சரியான நேரத்தில் அனைவரும் பணிபுரிந்து இருக்கிறீர்கள். உங்களுக்கும் நன்றி. விபத்தில் படுகாயம் அடைந்த விமானி வருண்சிங் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்றார். 


Next Story