அரசு பஸ் பழுதானதால் பள்ளி மாணவர்கள் அவதி


அரசு பஸ் பழுதானதால் பள்ளி மாணவர்கள் அவதி
x
தினத்தந்தி 13 Dec 2021 9:28 PM IST (Updated: 13 Dec 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் பழுதானதால் பள்ளி மாணவர்கள் அவதி

ஊட்டி

குன்னூரில் அரசு பஸ் பழுதாகி நின்றதால், கிராமங்களுக்கு செல்ல கூடிய பள்ளி மாணவர்கள் அவதி அடைந்தனர்.

அரசு பஸ் பழுது

குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து காட்டேரி, சேலாஸ், கொலக்கம்பை வழியாக உட்லண்ட்ஸ் பகுதிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கப்படும் இந்த பஸ்சில் கொலக்கம்பை, சேலாஸ் காட்டேரி மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், உள்பட பலர்  சென்று வருகின்றனர். 

இந்தநிலையில் நேற்று மாலை குன்னூரில் இருந்து 5.30 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்ஸில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது படியிலும் பயணிகள் தொங்கியபடி பயணித்தனர். பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள லெவல் கிராசிங் பகுதியில் பஸ் சென்றபோது, அரசு பஸ்சின் அடிப்பகுதியில் ஒரு பாகம் உடைந்து பழுதானது. 

பள்ளி மாணவர்கள் அவதி 

இதனால் அந்த பஸ் அங்கு நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாணவர்கள் உள்பட பயணிகள் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறும்போது, 2 மணி நேரத்துக்கு ஒருமுறை உட்லண்ட்ஸ் பகுதிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. தற்போது பஸ் பழுதடைந்து விட்டதால் இரவு நேரத்தில் வீடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. 

கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்புகள் அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டி இருப்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதை இருட்டில் கடந்து செல்ல அச்சமாக உள்ளது. பயணிகள் அதிகமாக இருந்தால் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 


Next Story