பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் 90 சதவீதம் நீர் இருப்பு


பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் 90 சதவீதம் நீர் இருப்பு
x
தினத்தந்தி 13 Dec 2021 9:43 PM IST (Updated: 13 Dec 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் ஏறக்குறைய 90 சதவீதம் நீர் இருப்பு இருப்பதால் அடுத்த ஒரு ஆண்டுக்கு சென்னைக்கு குடிநீர்பஞ்சம் வராது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிநீர் வழங்கும் ஏரிகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த மாதம் பெய்த கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பின.

தற்போது 3 ஆயிரத்து 291 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 3 ஆயிரத்து 58 மில்லியன் கன அடியும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 881 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3 ஆயிரத்து 76 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.

அதேபோல், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் அதன் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரத்து 318 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இதுதவிர 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் ஆயிரத்து 14 மில்லியன் கன அடியுடன் ஏரி நிரம்பி உள்ளது.

90 சதவீதம் இருப்பு

பூண்டி ஏரியில் 94.65 சதவீதமும், சோழவரம் ஏரியில் 81.50 சதவீதமும், புழல் ஏரியில் 93.21 சதவீதமும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 100 சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 91.03 சதவீதமும், வீராணம் ஏரியில் 69.27 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. சராசரியாக அனைத்து ஏரிகளிலும் 89.61 சதவீதம் அதாவது 90 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.), தற்போது 11 ஆயிரத்து 847 மில்லியன் கன அடி (11.84 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது.

தட்டுப்பாடு வராது

தற்போதைய இருப்பு நிலவரத்தை வைத்து பார்க்கும்போது அடுத்த ஒரு ஆண்டுக்கு சென்னை மாநகரில் குடிநீர் பஞ்சம் அல்லது தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மாறாக இந்த ஆண்டு தொடக்கத்தில் வினியோகித்த 650 முதல் 700 மில்லியன் லிட்டர் என்ற அளவைவிட தற்போது கூடுதலாக சராசரியாக ஆயிரம் மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று 991.16 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.

பொதுமக்களும் அதிகமாக கிடைக்கிறது என்பதால் குடிநீரை வீணடிக்காமல் தேவையை உணர்ந்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story