வேன் மோதி தொழிலாளி இறந்த வழக்கில் டிரைவருக்கு ஓராண்டு சிறை
வேன் மோதி தொழிலாளி இறந்த வழக்கில் டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து குளித்தலை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குளித்தலை,
தொழிலாளி சாவு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பரளி மேலக்குடித்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவர் கடந்த 2018-ம் ஆண்டு குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி காவிரி ஆற்று பகுதியிலிருந்து மாட்டுவண்டியில் மணல் அள்ளிக் கொண்டு தனது மகளான கனகவள்ளி (35) உடன் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரளி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் எதிரே வந்த பயணிகள் வேன் மாட்டு வண்டியில் மோதியது.
இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் உயிரிழந்தார். அதுபோல மாட்டு வண்டியில் கட்டப்பட்டிருந்த 2 மாடுகளும் உயிரிழந்தன. மேலும் மாட்டு வண்டியில் அமர்ந்து வந்த கனகவள்ளி, பயணிகள் வேனில் வந்த கரூர் அருகே உள்ள புலியூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், லட்சுமிகாந்தன், சிவக்குமார், மாயவன் ஆகிய 5 பேரும் காயமடைந்தனர்.
ஓராண்டு சிறை
இதுகுறித்து குளித்தலை போலீசார் அப்போது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு குறித்து குளித்தலை குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் விசாரணை நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாக்யராஜ் விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரான கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த சதீஷ்பாபு (48) என்பவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story